செய்திகள்
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயக நியமனத்திற்கு எதிராக மனு தாக்கல்

Feb 18, 2025 - 06:22 PM -

0

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயக நியமனத்திற்கு எதிராக மனு தாக்கல்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக உயர் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவை நியமிக்க அரசியலமைப்பு சபையால் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரையை செல்லாததாக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

உடவலவே சோம விகாரையின் தலைமை விகாராதிபதி வேவெல்துவ ஞானபிரப தேரர் உள்ளிட்ட குழுவினரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சபாநாயகர் மற்றும் அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள், ஜனாதிபதி செயலாளர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர்கள், நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். 

சட்டத்தரணி சஞ்சய பொன்சேகா மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு 16 வேட்பாளர்கள் விண்ணப்பித்ததாகவும், அவர்கள் அரசியலமைப்பு சபையால் நேர்காணல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதற்கமைய, நேர்காணலுக்குத் தோற்றிய சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன் அதிக மதிப்பெண்களைப் பெற்றதாக தங்களுக்கு அறிய முடிந்ததாக மனுதாரர்கள் தெரிவித்தனர். 

இருந்த போதிலும், நேர்காணலுக்கு ஆஜரான உயர் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு பெயரிடுவதற்கான பரிந்துரையை அரசியலமைப்பு சபை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்ததாக மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

அதன்படி, இந்த சட்டவிரோத நியமனத்தின் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும், உயர் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கும் முடிவை இரத்துச் செய்து உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05