Feb 19, 2025 - 08:56 AM -
0
இலங்கையின் முன்னணி மொபைல் வலையமைப்புக்களில் ஒன்றான ஹட்ச், Sirāt NetZero தளத்துடன் தனது சந்தைப்படுத்தல் தொழிற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக, Sirat2sustainability Pvt Ltd உடன் கைகோர்த்துள்ளது. நிலைபேற்றியல் கொண்ட அபிவிருத்தியில் முன்னுதாரணமாகத் திகழ்கின்ற, பொறுப்புணர்வு மிக்க ஒரு வர்த்தக நிறுவனம் என்ற ஹட்ச் நிறுவனத்தின் நன்மதிப்பை இந்த மூலோபாய நகர்வு மேலும் ஆணித்தரமாக நிலைநாட்டியுள்ளது. தனது அன்றாட தொழிற்பாடுகளில் நிலைபேற்றியல் கொண்ட நடைமுறைகளை உள்வாங்குவதில் ஹட்ச் தற்போது மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளில் முக்கியமானதொரு படியாக இக்கூட்டு முயற்சி காணப்படுவதுடன், சூழல் மீதான தாக்கத்தைக் குறைப்பதில் அதன் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றது.
NetZero கோட்பாட்டினை உள்வாங்கிக் கொள்வதனூடாக, குறிப்பாக தனது சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியவாறு, தனது Carbon footprint ஐ தணித்து, கணித்து, பகுப்பாய்வு செய்து, மற்றும் குறைப்பதே ஹட்ச் நிறுவனத்தின் நோக்கமாகும். அந்த வகையில் 2025 ஜனவரி முதல், காபனீரொட்சைட்டு வெளியேற்றத்தின் துல்லியமான அளவினை உறுதி செய்வதற்காக, இதற்கென பிரத்தியேக அணியொன்று Sirāt தளத்தை உபயோகித்து தரவுகளை புள்ளி விபரங்களை கண்காணித்து, பகுப்பாய்வு செய்கின்றது. சூழலுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தணிவித்து, உலகளாவிய நிலைபேற்றியல் இலக்குகளுடன் தனது செயல்பாடுகளை ஒன்றிக்கச் செய்யும் ஹட்ச் நிறுவனத்தின் செயல்திறன் மிக்க அணுகுமுறையின் வழியாக இந்த முயற்சி வெளிவந்துள்ளது.
ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் நிறுவன விவகாரங்களுக்கான பொது முகாமையாளர் மங்கள பண்டார அவர்கள் இம்முயற்சி குறித்து கருத்து தெரிவிக்கையில், “நிலைபேற்றியல் என்பது எமது மூலோபாயத்தின் உள்ளார்ந்த அங்கமாகக் காணப்படுவதுடன், Sirat2sustainability உடனான எமது கூட்டு முயற்சியானது அதனையே பிரதிபலிக்கின்றது. Sirāt NetZero தளத்தை உள்வாங்கிக் கொள்வது, எமது Carbon footprint ஐ குறைப்பதை நோக்கிய முக்கியமான படிகளை மேற்கொள்வதற்கு எமக்கு இடமளிப்பதுடன், நிலைபேற்றியல் கொண்ட வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் எமது குறிக்கோளுடனும் ஒன்றியுள்ளது. நிலைபேற்றியல் கொண்ட நடைமுறைகளை எமது தொழிற்பாடுகளுடன் தீவிரமாக ஒருங்கிணைப்பதனூடாக, பசுமையான எதிர்காலத்தை நோக்கி நகர்வதற்கான வழியை அமைப்பதில் முன்னிற்பதே எமது நோக்கமாகும்,” என்று குறிப்பிட்டார்.
Sirat2sustainability Pvt Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் ஷஃபீக் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “ஹட்ச் நிறுவனத்தின் NetZero பயணத்தில் அதனுடன் ஒத்துழைப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான நுண்ணறிவுகள் மற்றும் அளவிடப்படக்கூடிய பெறுபேறுகளை வழங்கும் வகையில் எமது தளம் வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன், ஹட்ச் நிறுவனம் தனது நிலைபேற்றியல் நோக்கங்களை அடையப்பெற்று, பசுமையான எதிர்காலத்தைக் கொண்ட இலங்கைக்கு பங்களிப்பதற்கு அதற்கு வலுவூட்டும்,” என்று குறிப்பிட்டார்.
நிலைபேற்றியல் கொண்ட அபிவிருத்தியில் ஹட்ச் நிறுவனத்தின் தலைமைத்துவத்தையும், நீண்ட கால அடிப்படையில் சூழல் பொறுப்புணர்வு மீதான அதன் கவனத்தையும் இக்கூட்டாண்மை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. Sirāt NetZero தளம் கொண்டுள்ள ஆற்றல்களை சிறப்பாகப் பயன்படுத்தி, உமிழ்வுகளைக் குறைப்பதில் செறிவான கவனத்தினூடாக, நல்விளைவை ஏற்படுத்தும் மாற்றத்தை முன்னெடுக்க ஹட்ச் நிறுவனத்தால் முடிவதுடன், அதன் மூலமாக நிறுவனத்தினுள் நிலைபேற்றியல் குறித்த அக்கறை கொண்ட, மற்றும் சூழல் மீது பொறுப்புணர்வு மிக்க கலாச்சாரத்தை வளர்க்க முடியும்.
ஹட்ச் ஸ்ரீலங்கா தொடர்பான விபரங்கள்
ஹொங்கொங் நாட்டைத் தளமாகக் கொண்ட Fortune 500 நிறுவனங்கள் குழுமமான CK Hutchison Holdings (CKHH) இன் துணை நிறுவனமான ஹட்ச் ஸ்ரீலங்கா, இலங்கையில் தொலைதொடர்பாடல் துறையில் முக்கியமான செயல்பாட்டாளராக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் காணப்படுவதுடன், தொலைதொடர்பாடல் உள்ளடங்கலாக ஆறு பாரிய துறைகளில் செயல்பட்டுவருவதுடன், 2023 ம் ஆண்டில் சுமார் 60 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை CKHH பதிவாக்கியுள்ளது.
1997 ம் ஆண்டில் இலங்கை சந்தையில் காலடியெடுத்து வைத்த ஹட்ச், 2004 ம் ஆண்டில் GSM சேவையின் அறிமுகத்தைத் தொடர்ந்து, 2011 இல் 3G மற்றும் 2018 இல் 4G என தனது சேவைகளை படிப்படியாக விஸ்தரித்தது. 2019 இல் எடிசலாட் ஸ்ரீலங்கா (Etisalat Sri Lanka) நிறுவனத்தை கொள்முதல் செய்தமை ஹட்ச்சின் சந்தை ஸ்தானத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதுடன், 078 மற்றும் 072 என ஆரம்பிக்கும் தொலைபேசி இணைப்பு இலக்கங்களுக்கு சிக்கனமான கட்டணங்களுடன், நம்பகமான சேவைகளை வழங்குவதற்கு இடமளித்துள்ளது. ஹட்ச்சின் 4G வலையமைப்பு இலங்கை சனத்தொகையில் 95% ஐ உள்ளடக்கியுள்ளதுடன், தேசத்தின் டிஜிட்டல் அபிலாஷைகளை அடைவதற்கு உதவும் வகையில் 5G சேவைகளை முன்னெடுப்பதற்கு இந்நிறுவனம் தயாராக உள்ளது.
சிக்கனமான கட்டணங்களுடன், நாட்டில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்கள் கூட தொடர்பாடல், வணிக செயல்திறன் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை மேம்படுத்துகின்ற வாய்ப்பைப் பெறும் வகையில் நம்பகமான இணைப்புத்திறனை வழங்கி, தனது சேவைகளை ஹட்ச் விரிவுபடுத்தி வருகின்றது.

