Feb 20, 2025 - 07:23 AM -
0
உக்ரைன் ஜனாதிபதி விளாடிமீர் ஜெலன்ஸ்கி தேர்தலை நடத்தாமல் சர்வாதிகாரியாக செயல்பட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், ரஷியா உடனான உறவை புதுப்பிக்க அவர் ஆர்வம் காட்டி வருகிறார்.
உக்ரைன் நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் வென்று விளாடிமீர் ஜெலன்ஸ்கி ஜனாதிபதியானார்.
கடந்த ஆண்டுடன் அவரது பதவிக் காலம் முடிவடைந்தது. உக்ரைன் சட்டங்களின்படி நாட்டில் போர் நடக்கும் நேரத்தில் தேர்தல் நடத்தத் தேவையில்லை.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பொன்றில், விளாடிமீர் ஜெலன்ஸ்கி தேர்தலை நடத்தாமல் சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.
தேர்தலை நடத்துவதற்கு அவர் மறுத்து வருகிறார். இதனாலேயே, அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோ பைடனுடன் சேர்ந்து போர் நீடித்திருக்க அவர் நாடகமாடி வந்துள்ளார்.
அங்கு தேர்தல் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஜெலன்ஸ்கிக்கு ஏற்படும்.
விரைவில் ரஷிய ஜனாதிபதி புட்டினை சந்திக்க உள்ளேன். ரஷியா-உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவதற்கான முழு முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அதில் வெற்றியும் பெறுவோம் என தெரிவித்துள்ளார்.