Feb 20, 2025 - 10:30 AM -
0
சட்டவிரோத மதுபானம் காரணமாக பல சமூக மற்றும் குடும்ப பிரச்சினைகள் எழுந்துள்ளதாகக் கூறி பொதுமக்கள் இராணுவத்திடம் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை கணபதிபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் சிலரே நேற்று (19) அன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு இவ்வாறு இராணுவத்தின் உதவியை நாடியுள்ளனர்.
இதன்போது சட்டவிரோத மதுபானத்தால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் குடும்ப மோதல்கள் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், சம்மாந்துறை பொலிஸார் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி போராட்டக்காரர்கள் இவ்வாறு மல்வத்தை பகுதியிலுள்ள இலங்கை இராணுவத்தின் 24 வது காலாட்படை பிரிவு தலைமையகத்திற்குச் சென்று, இராணுவ அதிகாரிகளிடம் தங்கள் குறைகளை தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் குறித்து உரிய தரப்பினரிடம் தெரிவிக்க நடவடிக்கை எடுப்பதாக இராணுவ அதிகாரிகள் அம்மக்களிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
--