Feb 20, 2025 - 05:23 PM -
0
பாதாள உலகக் குழுவின் தலைவர் எனக் கூறப்படும் கனேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நேற்று (19) கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் பெயராக மொஹமட் அசாம் ஷெரிப்தீன் என்று பெயரை அறிவித்ததன் ஊடாக தங்களுக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகக் கூறி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஒரு சீராக்கல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை மொஹமட் அசாம் ஷெரிப்தீனின் சகோதரர் தாக்கல் செய்துள்ளார்.
இந்த சீராக்கல் மனு தொடர்பாக நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்த சட்டத்தரணி தசுன் பெரேரா, கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொஹமட் அசாம் ஷெரிப்தீன் அல்ல என்று குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் மொஹமட் அசாம் ஷெரிப்தீனும் ஒருவர் அல்ல, இரண்டு நபர்கள் என்றும் அவர் கூறினார்.
இதனால் மொஹமட் அசாம் ஷெரிப்தீனின் குடும்பத்தினர் ஏராளமான சட்ட மற்றும் சமூகப் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிட்டுள்ளதாகக் கூறி, இது தொடர்பாக தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த தலைமை நீதவான் தனுஜா லக்மாலி, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாத நிலையில், அவரை ஆஜர்ப்படுத்தியதன் பின்னர் கோரிக்கையை சமர்ப்பிக்குமாறு சட்டத்தரணிக்கு அறிவித்தார்.

