Feb 23, 2025 - 07:58 AM -
0
ஒன்பதாவது செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் 2 முறை செம்பியனான அவுஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 351 ஓட்டங்களை பெற்றது.
அதிகபட்சமாக பென் டக்கெட் 165 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் பென் துவார்ஷூயிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 352 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பில் ஜோஷ் இங்லிஸ் 120 ஓட்டங்களை பெற்றதுடன் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
ஐ.சி.சி. நடத்தும் ஒருநாள் தொடர்களான செம்பியன்ஸ் கிண்ண மற்றும் ஒருநாள் கிண்ண வரலாற்றில் அதிகபட்சமாக சேசிங் செய்யப்பட்ட இலக்கு இதுவாகும்.
இதன் மூலம் ஐ.சி.சி. ஒருநாள் தொடர்களில் அதிகபட்ச ஓட்டங்களை சேசிங் செய்த அணி என்ற மாபெரும் உலக சாதனையை அவுஸ்திரேலிய அணி படைத்துள்ளது.
இதற்கு முன்னர் கடந்த ஒருநாள் உலகக்கிண்ண தொடரில் இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் அணி 345 ஓட்டங்களை சேசிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை தகர்த்துள்ள அவுஸ்திரேலிய அணி புதிய சாதனையை படைத்துள்ளது.
அந்த பட்டியல்:-
1. அவுஸ்திரேலியா - 356 ஓட்டங்கள் - செம்பியன்ஸ் கிண்ணம் 2025
2. பாகிஸ்தான் - 345 ஓட்டங்கள் - ஒருநாள் உலகக்கிண்ணம் 2023
3. அயர்லாந்து - 329 ஓட்டங்கள் - ஒருநாள் உலகக்கிண்ணம் 2011
4. பங்களாதேஸ் - 322 ஓட்டங்கள் - ஒருநாள் உலகக்கிண்ணம் 2015
5. இலங்கை - 322 ஓட்டங்கள் - செம்பியன்ஸ் கிண்ணம் 2017