Feb 24, 2025 - 02:04 PM -
0
புகழ்பெற்ற பாடகி கவிதா கிருஷ்ணமூர்த்தி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத்துறையில் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
இவர் லட்சுமிகாந்த் - பியாரேலால், சச்சின் தேவ் பர்மன், லதா மங்கேஷ்கர், முகமது ரஃபி உள்ளிட்ட இசை ஜாம்பவான்களுடன் பணியாற்றியுள்ளார்.
45 இற்கும் மேற்பட்ட மொழிகளில் 5,000 இற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள கவிதா, இந்தி, பெங்காலி, கன்னடம், போஜ்புரி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.
1976 ஆம் ஆண்டு, விலாயத் கான் இசையமைத்த 'காதம்பரி' திரைப்படத்தில் தனது முதல் பாடலைப் பாடிய கவிதா, தமிழ் குடும்பத்தில் பிறந்தார். தந்தை கல்வித்துறையிலும், இசையில் ஆர்வம் கொண்ட அத்தை ஊக்கத்தாலும் இசைப் பயணத்தைத் தொடங்கினார். ரவீந்திர சங்கீதத்தில் தொடங்கி, பல்ராம் பூரியிடம் பாரம்பரிய இசையைக் கற்றார். 8 வயதிலேயே தங்கப் பதக்கம் வென்று தனது திறமையை நிரூபித்தார்.
இசையமைப்பாளர் லட்சுமிகாந்த் டப்பிங் கலைஞராகப் பணியாற்றிய கவிதா, லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே போன்ற பாடகர்களுக்கான டெமோ டிராக்குகளை உருவாக்கினார்.
சோனு நிகம், அனு மாலிக், நதீம்-ஷ்ரவன் காலகட்டத்தில் மிகவும் பிரபலமானார். திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லாத கவிதாவிடம், 'இசைத்துறையில் நீங்கள் சந்திக்கும் ஒரு நபரை திருமணம் செய்து கொள்வீர்கள்' என்று சத்ய சாய் பாபா கூறியிருந்தார். அதுபோலவே, வயலின் கலைஞரும் இசையமைப்பாளருமான எல்.சுப்பிரமணியத்தை ஒரு பாடல் பதிவின் போது சந்தித்தார் கவிதா.
முதல் மனைவியை இழந்து நான்கு குழந்தைகளுடன் வாழ்ந்த சுப்பிரமணியத்திற்கு உறுதுணையாக இருந்த கவிதா, 1999 ஆம் ஆண்டு நவம்பர் 11 அன்று அவரைத் திருமணம் செய்து கொண்டார்.
35 ஆண்டுகளுக்கும் மேலாக மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் சைனசிடிஸ் பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் கவிதா, பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்,
'சில சமயங்களில் ஆஸ்துமா தொல்லை ஏற்பட்டாலும், பாடுவதை நிறுத்த எனக்கு எப்போதும் விருப்பமில்லை. இது நான் தொடர்ந்து எதிர்கொள்ளும் ஒரு சவால், ஒவ்வொரு முறையும் நான் வெற்றி பெறுகிறேன். கடவுளுக்கு நன்றி' என்று கூறியுள்ளார்.