விளையாட்டு
ஒரே போட்டியில் சாதனை மழை பொழிந்த விராட் கோலி!

Feb 24, 2025 - 04:03 PM -

0

ஒரே போட்டியில் சாதனை மழை பொழிந்த விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல ஒட்டு மொத்தமாக 10 சாதனைகளை படைத்துள்ளார். 

செம்பியன்ஸ் கிண்ண தொடரில் நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 241 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 

பின்பு சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து வெற்றி பெற்றது. 

தனது 51வது சதம் விளாசி அசத்திய விராட் கோலி 111 பந்தில் 100 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காம் இருந்தார். 

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியின்மூலம் கிரிக்கெட்டின் கிங் விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். 

நேற்றைய போட்டியில் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 14,000 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்தார். 

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 350 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 14,000 ஓட்டங்களை கடந்திருந்த நிலையில், விராட் கோலி வெறும் 287 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை தகர்த்தெறிந்துள்ளார். 

ஒருநாள் ​போட்டியில் சச்சினுக்கு அடுத்து அதிக ஓட்டங்கள் குவித்தது விராட் கோலி தான். 

மேலும் செம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் அதிக 50+ ஓட்டங்கள் (6 முறை 50+ ஓட்டங்கள்) அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். 

இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஷிகர் தவான், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் 6 முறை 50+ ஓட்டங்களை அடித்த நிலையில், கோலி அவர்களை சமன் செய்துள்ளார். 

இது மட்டுமின்றி செம்பியன்ஸ் கிண்ணம் மற்றும் உலகக் கிண்ண போட்டிகளில் அதிக 50+ ஓட்டங்கள் (23 முறை 50+ ஓட்டங்கள்) அடித்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார். 

செம்பியன்ஸ் கிண்ணம் மற்றும் உலகக் கிண்ண தொடர்களில் சச்சின் 50+ஓட்டங்கள் (23 முறை 50+ ஓட்டங்கள்) என்ற சாதனையை கோலி சமன் செய்துள்ளார். 

மேலும் நேற்றைய போட்டியின் மூலம் விராட் கோலி டி20, ஓடிஐ மற்றும் டெஸ்ட் என அனைத்து வடிவிலான 547 போட்டிகளில் 27,503 ஓட்டங்களை எடுத்துள்ளார். 

இதன்மூலம் ரிக்கி பொண்டிங்கின் 27,483 ஓட்டங்கள் என்ற சாதனையை கோலி முறியடித்துள்ளார். 

இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 34,357 ஓட்டங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். 

மேலும் செம்பியன்ஸ் கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றார். 

கோலிக்கு முன்பு, செம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு இந்திய வீரர் எடுத்த அதிகபட்ச தனிநபர் ஓட்டம் ரோஹித் சர்மாவின் 91 ஓட்டங்கள் ஆகும். 

இது தவிர பாகிஸ்தானுக்கு எதிரான செம்பியன்ஸ் கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் (224 ஓட்டங்கள்) எடுத்த வீரர் என்ற சாதனையயும் கோலி வசமானது. இலங்கை அணியின் முன்னாள் வீர் சனத் ஜயசூர்யாவின் 189 ஓட்ட சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளர். 

செம்பியன்ஸ் கிண்ணம் மற்றும் ஒருநாள் உலகக் கிண்ணத்திலும் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றார். 

இதுவரை, செம்பியன்ஸ் கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நான்கு துடுப்பாட்ட வீரர்களும், ஒருநாள் உலகக் கிண்ணத்தில் 13 துடுப்பாட்ட வீரர்களும் சதம் அடித்துள்ளனர். 

ஆனால் ஐசிசி ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் (செம்பியன்ஸ் கிண்ணம், உலகக் கிண்ணம்) இந்த சாதனையை படைத்த ஒரே வீரர் கோலி மட்டுமே. 

ஐ.சி.சி ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒன்பது போட்டிகளில் 433 ஓட்டங்கள் எடுத்த கோலி, அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 

ஐந்து செம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் 224 ஓட்டங்களும், நான்கு ஒருநாள் உலகக் கிண்ண போட்டிகளில் 209 ஓட்டங்களும் எடுத்துள்ளார். இதன் மூலம் ரோகித் சர்மாவின் 370 ஓட்டங்கள் என்ற சாதனையை அவர் முறியடித்தார். 

நேற்றைய போட்டியில் குல்தீப் யாதவ் வீசிய பந்தில் நசீம் ஷாவின் பிடியெடுப்பை எடுத்ததன் மூலம், விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் தனது பிடியெடுப்புக்களின் எண்ணிக்கையை 157 ஆக உயர்த்தினார். 

இது 334 ஒருநாள் போட்டிகளில் மொஹமட் அசாருதீனின் 156 பிடியெடுப்புக்களின் சாதனையை விட அதிகம். 

இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹல ஜயவர்தனே (218) மற்றும் அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பொண்டிங் (160) மட்டுமே இப்போது ஓடிஐயில் கோலியை விட அதிக பிடியெடுப்பக்களை எடுத்துள்ளனர். 

நேற்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி ஐ.சி.சி போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது 5வது ஆட்ட நாயகன் விருதை வென்றார். 

ஐ.சி.சி போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக வேறு எந்த வீரரும் மூன்று ஆட்டநாயகன் விருதுகளுக்கு மேல் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05