Feb 24, 2025 - 06:15 PM -
0
கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்காக உதவியதாகக் கூறப்படும் சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரித்து வருவதாக கொட்டாஞ்சேனை பொலிஸார், கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
கொழும்பு 15, மெத்சந்த செவன வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் பசிந்து விராஜ் என்ற சந்தேகநபர், இன்று (24) கொட்டாஞ்சேனை பொலிஸாரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, கொட்டாஞ்சேனை உப பொலிஸ் பரிசோதகர் அரவிந்த, சந்தேகநபர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தார்.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்களுக்கு துப்பாக்கியை வழங்கியது இந்த சந்தேக நபர்தான் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திராஜா, விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டதாக "அத தெரண" நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.