செய்திகள்
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நிவாரணப் பொதி

Feb 25, 2025 - 12:09 PM -

0

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நிவாரணப் பொதி

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியொன்றை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. 

உணவு பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக விவசாய கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் உணவுக் கொள்கை மற்றும் உணவு பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் நேற்று (24) மூன்றாவது முறையாக பாராளுமன்ற வளாகத்தில் கூடியபோது, ​​இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. 

சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மற்றும் அந்தப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பன குறித்து கவனம் செலுத்தப்பட்டது. 

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பண்டிகைக் காலத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மானிய விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க ஒரு பில்லியன் ரூபா ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளதோடு இது குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது. 

சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்களை குறைந்தபட்ச அளவில் பராமரிப்பது மற்றும் பேக்கரி பொருட்களின் விலைகளைக் குறைப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 

நெல் கொள்முதல் குறித்தும் இங்கு ஆராயப்பட்டதோடு நெல் கொள்வனவு செய்வதற்காக அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் கடன் வசதிகளின் கீழ் வாங்கப்படும் நெல்லின் அளவைக் கண்காணிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. சில நெல் ஆலை உரிமையாளர்கள் நெல் வாங்குவதற்காக பெற்ற கடன்களை வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்துள்ளதோடு இது குறித்து ஆராய்வதற்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

பாரிய அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் நெல் வாங்குவதற்காக 15 பில்லியன் ரூபாய்க்கு மேல் வங்கிக் கடன்களைப் பெற்றுள்ளதாகத் இங்கு தகவல் வெளியானது. எனவே, இந்த ஆண்டு 250,000 மெட்ரிக் டொன் நெல் கொள்வனவு செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதோடு சிறு நெல் ஆலை உரிமையாளர்கள் நெல் கொள்வனவு செய்வதை ஊக்குவிப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. மீண்டும் அரிசி பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறும் இதன்போது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

மானிய விலையில் நுகர்வோருக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக கூட்டுறவு மற்றும் சதோச வலையமைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. விலைக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதன் மூலம் நுகர்வோருக்கு உகந்த சந்தையை உருவாக்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

Comments
0

MOST READ
01
02
03
04
05