Feb 25, 2025 - 05:56 PM -
0
தென் கொரியாவில் அன்சியோங் (Anseong) நகரத்தில், சியோலைச் (Seoul) சுற்றியுள்ள பகுதியில் நெடுஞ்சாலை ஒன்றின் கட்டுமானப் பணியின்போது பாலம் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் இன்று (25) காலை 9.50 மணியளவில் (உள்ளூர் நேரம்) நிகழ்ந்தது. இதில் 6 பேர் காயமடைந்தனர், அவர்களில் 5 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் இருவர் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள், மற்ற இருவர் தென் கொரியர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலத்தை ஆதரிக்கும் 50 மீட்டர் நீளமுள்ள ஐந்து எஃகு கட்டமைப்புகள், கிரேன் மூலம் உயர்த்தப்பட்டபோது அடுத்தடுத்து இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய தீயணைப்பு முகமை, 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் மூன்று ஹெலிகொப்டர்களை மீட்பு நடவடிக்கைகளுக்கு அனுப்பியுள்ளது.
கட்டுமானத்தை மேற்கொண்ட ஹூண்டாய் இன்ஜினீயரிங் நிறுவனம், விபத்துக்கு வருத்தம் தெரிவித்து, அதிகாரிகளுடன் இணைந்து புலனாய்வு செய்வதாக அறிவித்துள்ளது.
தென் கொரியாவின் தற்காலிக அதிபர் சோய் சாங்-மோக் (Choi Sang-mok), மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் அனைத்து வளங்களையும் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளார். 2020 முதல் 2023 வரை, தென் கொரியாவில் 8,000-க்கும் மேற்பட்ட தொழில்சார் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தொழிலாளர் அமைச்சக தரவுகள் கூறுகின்றன.