Feb 26, 2025 - 05:14 PM -
0
நியூசிலாந்து மற்றும் இந்தியாவிடம் தோல்வியடைந்த பிறகு பாகிஸ்தான் அணி இப்போது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025லிருந்து வெளியேறியுள்ளது.
இதனால் பாகிஸ்தான் அணி அனைத்து தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறது. இந்நிலையில், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தன் பங்குக்கு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் பாகிஸ்தான் அணியின் தலைவராக அந்த அணியை 1992 இல் உலகக் கிண்ண வெற்றிக்கு இட்டுச் சென்றார்.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியை தொடங்கிய அவர் 2018 இல் பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான் ஊழல் வழக்கில் 2023 இல் கைதானார். கடந்த மாதம் பாக். நீதிமன்றம் அவருக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இவ்வழக்கில் இம்ரானின் மனைவி புஷ்ரா பீவிக்கு 7 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இலிருந்து வெளியேறியபின் இம்ரான் கான் சகோதரி அலீமா கான், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அவரை சந்தித்துள்ளார்.
தங்களது சந்திப்பு குறித்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அலீமா, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததற்கு இம்ரான் கான் மிகுந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார். அவர்கள் சிறையில் அந்த ஆட்டத்தை பார்த்தார்.
முடிவெடுக்கும் அதிகாரம் தங்களுக்கு பிடித்தவர்களுக்குக் கொடுக்கப்படும்போது கிரிக்கெட் அழிந்துபோகும் என்று இம்ரான் வருத்தப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வியின் செயல்பாடுகள் குறித்தும் இம்ரான் விமர்சித்து கேள்வி எழுப்பியதாக அலிமா கூறினார்.