Mar 1, 2025 - 10:21 AM -
0
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் 2025 தொடரில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி மற்றும் அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.
இந்த போட்டி இந்தியாவின் வதோதராவில் அமைந்துள்ள BCA மைதானத்தில் இடம்பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி 217 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
அதன்படி, வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மாஸ்டர்ஸ் அணி 7 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் போட்டியின் இறுதி ஓவரில் வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை மாஸ்டர்ஸ் அணி சார்பில் உபுல் தரங்க அதிரடியாக துடுப்பெடுத்தாடி 102 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், லஹிரு திரிமான்ன 53 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
இறுதி ஓவரில் 2 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், சதுரங்க டி சில்வா ஒரு சிக்ஸரை விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் 2025, பிப்ரவரி 22 அன்று தொடங்கியது. இதில் இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. இலங்கை மாஸ்டர்ஸ் அணியை குமார் சங்கக்கார வழிநடத்துகிறார்.
முதல் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்தாலும், அடுத்தடுத்த வெற்றிகளால் அணி புள்ளிப்பட்டியலில் வலுவான இடத்தைப் பிடித்துள்ளது.
இலங்கை மாஸ்டர்ஸ் அணி தனது அடுத்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அல்லது இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. தொடரின் இறுதிப்போட்டி 2025 மார்ச் 16 ஆம் திகதியன்று நடைபெறவுள்ளது.