Mar 3, 2025 - 04:42 PM -
0
2024 ம் ஆண்டில் பொருளாதார சவால்கள் அனைத்திற்கும் வெற்றிகரமாக முகங்கொடுத்து, முக்கியமான நிதியியல் அளவீடுகள் மத்தியில் வலுவான வளர்ச்சியுடன், உறுதியான நிதியியல் பெறுபேறுகளை DFCC வங்கி பதிவாக்கியுள்ளது. வங்கியின் குழும, தேறிய தொழிற்பாட்டு வருமானம் 30% ஆல் அதிகரித்து ரூபா 35 பில்லியனாக பதிவாக்கப்பட்டுள்ளதுடன், வரிக்குப் பின்னரான இலாபம், கடந்த ஆண்டிருந்து இந்த ஆண்டுக்கு 16% அதிகரிப்புடன் ரூபா 9.9 பில்லியனாகப் பதிவாக்கப்பட்டுள்ளது. வங்கியின் மொத்தச் சொத்துக்கள் 10% ஆல் அதிகரித்து ரூபா 709 பில்லியனாகப் பதிவாக்கப்பட்டுள்ளமை, அதன் நிதியியல் ஸ்திரத்தன்மை மற்றும் மூலோபாய விஸ்தரிப்பு முயற்சிகளை மீளவும் உறுதியாக எடுத்துக்காண்பித்துள்ளது.
பணப்புழக்கச் சூழலும் மேம்பட்டுள்ளதுடன், மத்திய வங்கியின் நாணயக் கொள்கை தளர்வுகளிலிருந்து வணிக நிறுவனங்களும், தனிநபர்களும் பயன்பெறுவதை உறுதி செய்யும் முகமாக, கடன் வழங்கல் மற்றும் வைப்பு வீதங்களையும் மூலோபாயரீதியாக DFCC வங்கி திருத்தம் செய்துள்ளது. கடன்கள் மற்றும் முன்பணம் மீதான வங்கியின் தேறிய வலுக்குறைப்பு அறவீடு 68% ஆல் வீழ்ச்சி கண்டு ரூபா 3.96 பில்லியனாகப் பதிவாக்கப்பட்டுள்ளதுடன், தேசிய அளவில் சாதகமான பொருளாதார போக்குகள் மற்றும் வலுவான பொருளாதார மீட்சி முயற்சிகள் அதற்கு உதவியுள்ளன. மேலும், தனது முதலீட்டுத் துறையையும் DFCC வங்கி உச்ச அளவில் பயன்படுத்தியுள்ளதுடன், உயர்ந்த அளவில் பிரதிபலனை ஈட்டித்தருகின்ற அரசாங்க பிணையங்கள் மீது தனது இடர்காப்பின்மையை அதிகரித்து, இலாபத்திறனை மேலும் மேம்படுத்தியுள்ளது.
வங்கியின் பங்கு மீதான வருவாயும் 10.99% ஆக காணப்பட்டதுடன், சொத்துக்கள் மீதான வருவாய் 2.01% ஆக மேம்பட்டுள்ளமையானது அது திறன்மிக்க வழியில் சொத்துக்களை பயன்படுத்துவதை பிரதிபலிக்கின்றன. தேறிய கட்டணங்கள் மற்றும் தரகுப் பணத்தில் 8% அதிகரிப்பை DFCC வங்கி பதிவாக்கியுள்ளதுடன், பணம் அனுப்பல், வாணிபம் தொடர்புபட்ட தரகுப்பணம் மற்றும் கடனட்டை தொழிற்பாடுகனே இதற்கான பிரதான காரணம். பணவீக்க அழுத்தங்களுக்கு மத்தியிலும், செலவைக் கட்டுப்படுத்தும் ஏற்பாட்டு நடவடிக்கைகள் மூலமாக தொழிற்பாட்டுச் செலவுகளை திறன்மிக்க முறையில் நிர்வகித்துள்ள வங்கி, தொழிற்பாட்டுத் திறனை பேணியுள்ளது.
மகத்துவம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கான அங்கீகாரம்
DFCC வங்கியின் சாதனைகள் சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், Global Banking and Finance Awards 2024 நிகழ்வில் இலங்கையிலுள்ள Banking Brand of the Year, Best Bank for Sustainable Development, மற்றும் Fastest Growing Retail Bank ஆகிய மூன்று மதிப்புமிக்க விருதுகளைச் சம்பாதித்துள்ளது. வங்கி தனது நிதியியல் வலிமை மற்றும் சந்தை நம்பிக்கை ஆகியவற்றை மீளவும் உறுதியாக எடுத்துக்காண்பிக்கும் வகையில், Fitch Ratings இடமிருந்து A(lka) என்ற National Long-Term Rating தரமுயர்வை அடையப்பெற்றுள்ளது.
மேலும், இலங்கையில் முதன்முதல் பசுமைப் பிணை முறியை (Green Bond) வழங்கி DFCC வங்கி வரலாறு படைத்துள்ளதுடன், இந்த வழங்கலானது கொழும்பு பங்குச்சந்தை மற்றும் லக்சம்பேர்க் பங்குச்சந்தை ஆகியவற்றில் நிரற்படுத்தப்பட்டுள்ளது. நிலைபேற்றியல் சார்ந்த முயற்சிகளுக்கான கடன் வழங்கலில் வங்கி காண்பிக்கும் அர்ப்பணிப்பை இது மேலும் ஆணித்தரமாக நிரூபித்துள்ளது.
நிதியியல் ஸ்தானத்தை மேலும் பலப்படுத்தல்
DFCC வங்கியின் கடன் துறையானது 13% ஆல் அதிகரித்து ரூபா 394 பில்லியனாகப் பதிவாக்கப்பட்டுள்ளதுடன், தனியார் துறை வளர்ச்சிக்கு அது ஆதரவளித்துள்ளது. வைப்புத் தளமானது 14% ஆல் வளர்ச்சி கண்டு, ரூபா 465 பில்லியனாகப் பதிவாக்கப்பட்டுள்ளதுடன், வலுவான பணப்புழக்க ஸ்தானத்தை உறுதி செய்துள்ளது. வங்கியின் மூலதனப் போதுமை விகிதங்கள் தொடர்ந்தும் வலுவானவையாகக் காணப்பட்டதுடன், 16.958% என்ற மொத்த மூலதனப் போதுமை விகிதமானது ஒழுங்குமுறை தேவைப்பாடுகளை விடவும் மேல்மட்டத்தில் உள்ளது.
பங்குதாரர்களுக்கான அர்ப்பணிப்பு மற்றும் எதிர்கால வளர்ச்சி தனது வலுவான நிதியியல் பெறுபேறுகளை அங்கீகரிக்கும் வகையில், 31% என்ற பங்குஇலாப விகிதத்தைப் பேணியவாறு, பங்கொன்றுக்கு ரூபா 6.00 என்று முதலும், இறுதியுமான பங்குஇலாபத்தை DFCC வங்கியின் பணிப்பாளர் சபை அங்கீகரித்துள்ளது.
பிரதம நிறைவேற்று அதிகாரி திமால் பெரேரா அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்:
“பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், நெகிழ்திறன் மற்றும் மூலோபாய சுறுசுறுப்பு இயக்கம் ஆகியவற்றைக் காண்பித்தவாறு, மிகச் சிறந்த பெறுபேறுகளை DFCC வங்கி பதிவாக்கியுள்ளது. டிஜிட்டல் புத்தாக்கம், விவேகமான இடர் முகாமைத்துவம் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வங்கிச்சேவை ஆகியவற்றின் மீது நாம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தியுள்ளமை, நீண்ட கால அடிப்படையில் வளர்ச்சி மற்றும் நிதியியல் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை முன்னெடுக்கும்.”
புத்தாக்கம், ஸ்திரத்தன்மை மற்றும் நிதியியல் உள்ளடக்கம் ஆகியவற்றின் மீது அர்ப்பணிப்புடன், சவால்கள் அனைத்தையும் தாண்டி, இலங்கையில் பரிணாம மாற்றங்கண்டு வருகின்ற வங்கிச்சேவைப் பரப்பில் தலைதூக்குகின்ற வாய்ப்புக்களை தவறவிடாது பயன்படுத்திக் கொள்வதற்கு DFCC வங்கி தொடர்ந்தும் சிறப்பான ஸ்தானத்தில் உள்ளது.

