Mar 3, 2025 - 05:13 PM -
0
ரயில்களில் யானைகள் மோதி இடம்பெறும் விபத்துக்களை குறைக்க ஒரு முறையான திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும், இது தொடர்பில் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாகத் தீர்ப்பளிக்க வேண்டும் என்று கோரியும் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழுவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவில் வனவிலங்கு பணிப்பாளர் நாயகம், ரயில்வே பொது முகாமையாளர், போக்குவரத்து அமைச்சர், வனவிலங்கு அமைச்சர், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தற்போது காட்டு யானைகள் ரயில்களில் மோதும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.
2011 ஆம் ஆண்டு நாடு முழுவதும் நடத்தப்பட்ட காட்டு யானைகள் கணக்கெடுப்பில், நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 5,879 ஆக இருந்ததாகவும், சமீபத்திய கணக்கெடுப்பில் அந்த எண்ணிக்கை 3,130 ஆகக் குறைந்துள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 13 ஆண்டுகளில் ரயில்களுடன் மோதி குறைந்தது 151 யானைகள் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறந்த யானைகளில் சுமார் 40 சதவீதம் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவை என்றும், இந்த நிலைமை யானைகளின் எண்ணிக்கையின் வளர்ச்சியை மோசமாகப் பாதிக்கிறது என்றும் மனுதாரர்கள் குற்றம் சாட்டினர்.
வெலிகந்த மற்றும் புனானி இடையேயான ரயில் மார்க்கத்தில் அதிக விபத்துக்கள் நடப்பதாகவும், 2022 ஆம் ஆண்டில் அந்தப் மார்க்கத்தில் 23 யானை விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், அம்பன்பொல மற்றும் கல்கமுவ, கல்ஓயா மற்றும் ஹிங்குராக்கொட, மனம்பிட்டிய மற்றும் வெலிகந்த போன்ற ரயில் மார்க்கத்திலும் அடிக்கடி யானை விபத்துக்கள் ஏற்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தரவை ஆய்வு செய்த போது, ரயில்களில் யானைகள் மோதும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் குறைக்க ஒரு முறையான திட்டத்தை வகுக்க வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்துகிறது என்றும் மனுதாரர் கூறினார்.
இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்த போதிலும், அவற்றைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் மூலம், மக்களின் அடிப்படை மனித உரிமைகளை பிரதிவாதிகள் மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும், அண்மையில் ரயில் - யானை விபத்துக்கள் குறித்து தடயவியல் விசாரணை நடத்த பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தைக் கோருகின்றனர்.
விபத்துக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் விபத்துகளைத் தடுக்க ரயில் சாரதிகளுக்கு வேக வரம்புகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், யானை விபத்துக்களைக் குறைக்க சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு அமைச்சர், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் தொடர்ச்சியான விதிமுறைகளை வெளியிட வேண்டும் என்றும் மனுதாரர்கள் மேலும் கோரியுள்ளனர்.

