Mar 4, 2025 - 09:53 AM -
0
தோட்டத்தொழிலாளர்களின் தொடர் குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீயினால் 12 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
இந்த சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் கே.எம். தோட்டப்பிரிவில் நேற்று (3) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதனால் குறித்த தொடர் குடியிருப்பில் வசித்த 26 குடும்பங்களைச் சேர்ந்த 100 இற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தினால் எவருக்கும் உயிராபத்தோ பாரிய காயங்களோ ஏற்படாத போதிலும் தொழிலாளர்களின் அத்தியாவசிய ஆவணங்கள், தளபாடங்கள், ஆடைகள், உணவு பொருட்கள் உட்பட பல உடைமைகள் தீக்கிரையாகியுள்ளன.
தீப் பரவல் ஏற்பட்ட போது பிரதேசவாசிகள் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தீயணைப்பு பிரிவு, இராணுவம், பொலிஸார் உட்பட அனைவரும் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததனால் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்து சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள செனன் பாடசாலையில் தங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சம்பவம் ஏற்பட்டு ஒரு சில நிமிடங்களில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்களையும் தெரிவித்துள்ளார்.
இந்த தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாகவும் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
--