Mar 5, 2025 - 09:53 AM -
0
ஊடகவியலாளர் ஒருவரின் கணவரின் மர்மமான மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கல்கிஸ்ஸை மேலதிக நீதவான் ஹேமாலி ஹால்பன்தெனிய ஒப்படைத்துள்ளார்.
அதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு மார்ச் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
தெஹிவளை வைத்திய வீதியில் வசிக்கும் 60 வயதுடைய அகொஸ்டினுகே சமரஜீவ என்ற நபரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
ஜனவரி 1 ஆம் திகதி அவரது கணவர் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பாத காரணத்தால், மறுநாள், ஜனவரி 2 ஆம் திகதி கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் காயங்களுடன் ஆபத்தான நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.
ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், ஜனவரி 3 ஆம் திகதி காலை உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தெஹிவளை ஹில் தெருவில் உள்ள ஒரு வழக்கறிஞருக்குச் சொந்தமான வீட்டின் முற்றத்தில் உயிரிழந்த நபர் கிடப்பதாக, வழக்கறிஞரின் கணவரான முன்னாள் விமானப்படை அதிகாரி, 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்குத் தகவல் அளித்திருந்தார்.
குறித்த தகவலை தொடர்ந்து தெஹிவளை பொலிஸ் அதிகாரிகள் இரவு 11 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்த நபரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பதிலாக, அவரை நீராட்டி வேறு உடைகளை மாற்றியமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் குறிப்பிட்டார்.
இந்த மரணம் குறித்து தெஹிவளை பொலிஸார் முறையான விசாரணை நடத்தவில்லை என்றும் சட்டத்தரணி மேலும் கூறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டின் உரிமையாளர் மற்றும் குடியிருப்பாளர்களிடமிருந்து வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டதாக தெஹிவளை பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்தில் கொண்ட மேலதிக நீதவான், பிரேத பரிசோதனை அறிக்கையில் மரணத்திற்கான காரணம் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், தெஹிவளை பொலிஸார் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் கூறி, மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கத்திடம் ஒப்படைத்தார்.
குறித்த வழக்கு மார்ச் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

