Mar 5, 2025 - 11:03 AM -
0
பல்வேறு துணை நிறுவனங்கள் மற்றும் இணை நிறுவனங்களை உள்ளடக்கிய நிலையில் இலங்கையின் மிகப் பாரிய தனியார் துறை வங்கியாக திகழும் கொமர்ஷல் வங்கிக் குழுமமானது கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வெளியிட்டுள்ள தனது 2024 வருடாந்த நிதிநிலை அறிக்கைகளில் விதிவிலக்கான வலுவான நிதியியல் செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. குறைபாடுக் கட்டணங்கள் மற்றும் பிற இழப்புகளுக்கான விவேகமான ஏற்பாடுகள், பயனுள்ள ஐந்தொகை முகாமைத்துவம் மற்றும் வலுவான கடன் வழங்கல் வளர்ச்சி ஆகியவை வங்கியினால் நடத்தப்பட்ட இலங்கை சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களின் (SLISB) மறுசீரமைப்பினால் ஏற்பட்ட கணிசமான இழப்பைத் தணிப்பதற்கு உதவியது.
கடந்த 2024 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் SLISB களின் மறுசீரமைப்பின் மூலம் குழுமமானது அதன் முழு நிகர இழப்பான ரூ 45.11 பில்லியனை அங்கீகரித்துள்ளது, இதன் விளைவாக டிசம்பர் 31, 2024 இல் முடிவடைந்த 12 மாதங்களுக்;கான மொத்த வருமானம் 19.50% ஆல் குறைவடைந்து ரூ 274.98 பில்லியனை பதிவு செய்துள்ளது. எவ்வாறாயினும், முதன்மையாக SLISB களை பொறுத்தவரையில் ரூ. 62.30 பில்லியனின் நிகர குறைபாடின் எதிரிடையான மாற்றமானது, ஒட்டுமொத்த தாக்கத்தை கணிசமாகக் குறைத்தது. குறைந்த வட்டி வீதங்கள் காரணமாக வட்டி வருமானமானது 7.54% ஆல் குறைவடைந்து ரூ.275.22 பில்லியனை பதிவு செய்துள்ளது. இது குழுமத்தின் உச்ச வரையறை நிலையை மேலும் பாதித்தது.
பணவைப்புகளை சரியான நேரத்தில் மறு விலை நிர்ணயம் செய்தல் மற்றும் வங்கியின் வலுவான CASA அடிப்படை, என்பன காரணமாக மொத்த வட்டிச் செலவுகள் 25.63% ஆல் குறைவடைந்து ரூ. 157.08 பில்லியனை பதிவு செய்தது. இதே வேளை குழுமத்தின் நிகர வட்டி வருமானமானது 2023 ஆம் ஆண்டில் ரூபா. 86.41 பில்லியனாக இருந்த நிலையில் 36.71% சிறப்பான வளர்ச்சியுடன் ரூபா. 118.13 பில்லியனை பதிவு செய்தது. இதே வேளை நிகர கட்டணம் மற்றும் தரகு வருமானம் 5.62% ஆல் அதிகரித்து ரூ.23.65 பில்லியனை பதிவு செய்தது. மதிப்பாய்வுக்கு உட்பட்ட ஆண்டில் குழுமத்தின் நிகர செயற்பாட்டு வருமானமானது 103.61% ஆல் அதிகரித்து ரூ.169.35 பில்லியனை பதிவு செய்தது. முழு ஆண்டுக்கான செயற்பாட்டுச் செலவுகள் மிதமான முறையில் 17.04% அதிகரித்து ரூ. 51.84 பில்லியனாக உயர்ந்துள்ள நிலையில், குழுமமானது நிதியியல் சேவைகள் மீதான வரிக்கு முந்தைய செயற்பாட்டு இலாபமாக ரூ.117.52 பில்லியனை பதிவுசெய்துள்ளது, இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 202.21% அதிகமாகும்.
நிதியியல் சேவைகள் மீதான வரிகள் 297.20% ஆல் அதிகரித்து ரூ. 19.71 பில்லியனாக இருந்தது, இதன் விளைவாக கடந்த 12 மாதங்களில் வருமான வரிக்கு முந்தைய இலாபம் ரூ. 97.81 பில்லியனை பதிவு செய்த நிலையில் இது முந்தைய ஆண்டை விட 188.29% முன்னேற்றமாகும். ஆண்டுக்கான வருமான வரிக் கட்டணம் 250.22% ஆல் அதிகரித்து ரூ. 42.12 பில்லியனாக இருந்தது. இது 2024 ஆம் ஆண்டில் வரிக்குப் பிந்தைய நிகர இலாபம் ரூ. 55.69 பில்லியனுக்கு வழிவகுத்ததுடன் இது 154.28% வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. குழுமத்தின் ஆண்டுக்கான மொத்த வரிக் கட்டணம் ரூ. 61.83 பில்லியன் ஆகும், இது முந்தைய ஆண்டு ரூ. 16.99 பில்லியன் ஆக இருந்த நிலையில் இம்முறை மூன்று மடங்கு அதிகமாகும்.
தனித்தனியாக எடுத்துக் கொண்டால், கொமர்ஷல் வங்கியானது வரிக்கு முந்தைய இலாபமாக ரூ 95.53 பில்லியனையும், வரிக்குப் பிந்தைய இலாபமாக ரூ 54.07 பில்லியனையும் பதிவு செய்துள்ளது. இதற்கிணங்க மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டில், முறையே 199.67% மற்றும் 164.28% வளர்ச்சியைப் பதிவுசெய்தது. பங்கொன்றின் அடிப்படை வருமானமானது 2023 இல் ரூ.14.89 ஆக இருந்த நிலையில் ரூ.37.74 ஆக உயர்ந்தது.
இந்த முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் தலைவர் திரு ஷர்ஹான் முஹ்சீன், நாட்டின் பாரிய பொருளாதார சூழலில் அதிக ஸ்திரத்தன்மை எட்டப்பட்டிருப்பதையும், இறையாண்மைக் கடனை மறுசீரமைப்பது ஒரு நேர்மறையான நடவடிக்கை என்பதையும் நாம் அங்கீகரித்தாலும், அதன் இறுதி முடிவு பெரும்பாலான வங்கிகளுக்கு கணிசமான இழப்பினை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சூழலில், எமது 2024 செயற்றிறன் முடிவுகள், வெளிப்புறச் சவால்களை முகாமைத்துவம் செய்வதற்கான கொமர்ஷல் வங்கியின் விவேகமான அணுகுமுறையின் பெறுமதி மற்றும் அதன் முக்கிய வங்கிக் கடமைகள் மற்றும் கடினமான காலங்களில் செயல்பாட்டு மீள் எழுச்சிக்கான திறன் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது.
கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு சனத் மனதுங்க தெரிவிக்கையில், வங்கியானது 2023 ஆம் ஆண்டில் இலங்கை சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களால் ஏற்படக்கூடிய இழப்புகளுக்கான வழங்கல் காப்பீட்டை 35% இலிருந்து 52% ஆக அதிகரித்துள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 54% ஆக அதிகரித்துள்ளதாகவும், இதன் விளைவாக இந்த பத்திரங்களின் அங்கீகாரம் நீக்கப்படும் திகதி வரை ளுடுஐளுடீ களில் ஒட்டுமொத்த குறைபாட்டுக்காக ரூ. 92.86 பில்லியன் ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கைகள் வங்கி இந்த பத்திரங்களின் மறுசீரமைப்பில் ஏற்பட்ட நிகர இழப்புகளை குறைக்க உதவியது.
மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டின் இறுதிக் காலாண்டில் கடன் வழங்குதல் அனைத்து வேளையிலும் உயர்வை எட்டியிருந்தது, இதன் போது கடன் புத்தகம் குறிப்பிடத்தக்க வகையில் மாதாந்தம் சராசரியாக ரூ. 36.23 பில்லியன் என்ற ரீதியில், ரூ 108.69 பில்லியனினால் வளர்ச்சியடைந்தது. இது மொத்தக் கடன்கள் மற்றும் முன்பணங்களை ரூ. 1.53 ட்ரில்லியனாக உயர்த்தியது, இது 17.73% வளர்ச்சியைக் குறிக்கிறது. பணவைப்பு வளர்ச்சியும் துரிதப்படுத்தப்பட்டு ரூ.79.56 பில்லியனால் அதிகரித்துள்ளது. ஞ4 இல் மட்டும் மாதாந்தம் சராசரியாக ரூ. 26.52 பில்லியன் என்ற ரீதியில் ஆண்டுக்கு 7.36% உயர்வுடன் மொத்த வைப்புத்தொகை ரூ. 2.31 ட்ரில்லியனாக அதிகரித்தது. இதன் விளைவாக, குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.220.39 பில்லியனாக அதிகரித்துள்ளது. 12 மாதங்களில் 31 டிசம்பர் 2024 நிலவரப்படி, ரூ. 2.876 ட்ரில்லியன் பதிவு செய்யப்பட்டதுடன் இது 8.30% சிறப்பான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.
கொமர்ஷல் வங்கியானது உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட முதலாவது இலங்கை வங்கியாகும். மற்றும் கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. கொமர்ஷல் வங்கியானது இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (SME) துறைக்கு மிகப்பெரிய கடனுதவி வழங்குவதோடு, டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் முன்னணியில் உள்ளது. அத்துடன் இலங்கையின் முதலாவது 100% கார்பன் நடுநிலை வங்கியாகும். கொமர்ஷல் வங்கியானது நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயல்படுத்துகிறது, மேலும் இலங்கை வங்கிகளுக்கிடையில் பரந்த சர்வதேச தடத்தைக் கொண்டுள்ளது, பங்களாதேஷில் 20 நிலையங்கள், மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் மற்றும் மாலைத்தீவில் பெரும்பான்மையுடன் கூடிய முழு அளவிலான Tier I வங்கி ஆகியவற்றை கொண்டு திகழ்கிறது.வங்கியின் முழு உரித்தான துணை நிறுவனமாக CBC ஃபினான்ஸ் லிமிடெட் திகழ்கிறது. வங்கியானது அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பரந்த அளவிலான நிதிச் சேவைகளையும் வழங்குகிறது.