Mar 5, 2025 - 08:41 PM -
0
போக்குவரத்துப் பிரிவுகளில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பண வெகுமதிகளை அதிகரிக்க இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, 01.02.2025 முதல் குறித்த அதிகாரிகளுக்கு தற்போது வழங்கப்படும் வெகுமதித் தொகையை 25% அதிகரிக்குமாறு, பதில் பொலிஸ்மா அதிபரால் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்போது, களப் பணிகளில் ஈடுபடும் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள், துறை மற்றும் அலுவலகப் பணிகளில் ஈடுபடும் பரிசோதக தர நிலை அதிகாரிகள், பொலிஸ் சார்ஜென்ட்கள், பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் களப் பணிகளில் ஈடுபடும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதிகள் ஆகியோருக்கு அதிகரித்த வெகுமதித் தொகை வழங்கப்படுகிறது.
மேலும், இவ்வாறு வழங்கப்படும் கொடுப்பனவுகள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என்று பதில் பதில் பொலிஸ்மா அதிபர் மேலும் அறிவித்துள்ளார்.
அத்துடன் இந்த அதிகாரிகளை மதிப்பீடு செய்து ஊக்குவிப்பதன் மூலம் உத்தியோகபூர்வ கடமைகளின் செயல்திறன் மற்றும் தரத்தை மேலும் மேம்படுத்துவதே முதன்மையான நோக்கம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து பிரிவுகளில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளால், போக்குவரத்து விதிமீறல்கள், விபத்துக்கள், வேகம் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட பதிவாகும் போக்குவரத்து குற்றங்களைக் குறைக்க தங்களால் முடிந்த அனைத்தை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

