Mar 7, 2025 - 01:08 PM -
0
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது மதகுரு ஒருவர் குற்றச்சாட்டு வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத் தலைவர் மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி, ஷமியை "குற்றவாளி" என்று குறிப்பிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
2025 சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ஷமி 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினார்.
ஆனால், ரமலான் மாதத்தில் நடந்த இப்போட்டியின் போது, ஷமி மைதானத்தில் தண்ணீர் குடித்த காட்சி வைரலானது.
இதை அடுத்து, மௌலானா ஷஹாபுதீன், "ரோஸா (நோன்பு) என்பது முஸ்லிம்களின் கட்டாய கடமை. ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் நோன்பு நோற்காமல் இருந்தால், அது பெரும் குற்றம். ஷமி ஆரோக்கியமாக இருந்து விளையாடியதால், நோன்பு நோற்காமல் தண்ணீர் குடித்தது தவறு" என்று கூறியுள்ளார். மேலும், "இது மக்களுக்கு தவறான செய்தியை அளிக்கிறது. ஷரியத் பார்வையில் ஷமி குற்றவாளி" என்று அவர் குறிப்பிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஷமியின் உறவினர் மற்றும் பயிற்சியாளர் மும்தாஸ் தெரிவிக்கையில்,
"நாட்டிற்காக விளையாடும் ஷமியை இப்படி விமர்சிப்பது வெட்கக்கேடு. பாகிஸ்தான் வீரர்களும் நோன்பு நோற்காமல் ஆடியுள்ளனர்" என்று பதிலளித்தார்.
மேலும் சிலர் இதை "மதவெறி" என்று விமர்சித்தாலும், மற்றவர்கள் ஷமியை ஆதரித்து, "அவர் தனது திறமையால் நாட்டிற்கு பெருமை சேர்க்கிறார்" என்று பதிவிட்டுள்ளனர்.
ஷமி தற்போது மார்ச் 9-ல் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டிக்கு தயாராகி வருகிறார்.
இந்த சர்ச்சை அவரது கவனத்தை சிதறடிக்காது என்று அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர். இது தொடர்பாக ஷமியிடமிருந்து இதுவரை நேரடி பதில் வரவில்லை.
இந்த விவகாரம் மதம் மற்றும் விளையாட்டை இணைத்து பேசப்படுவதால், பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.