Mar 7, 2025 - 01:49 PM -
0
இந்திய அணியின் அணி தலைவர் ரோஹித் சர்மாவை சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டிக்கு பின் நீக்குவது குறித்து பிசிசிஐ சில அதிரடி முடிவுகளை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரோஹித் சர்மாவுக்கு அடுத்த மாதம் 38 வயது ஆகிவிடும். அதன் பின் அவர் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடுவது என்பது கடினமான விஷயமாகவே இருக்கும்.
சமீபத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து, இந்திய ஒரு நாள் அணி மற்றும் டெஸ்ட் அணிக்கு அடுத்த அணி தலைவரை தேர்வு செய்வது பற்றி பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் பிசிசிஐ அதிகாரிகளுடன் பேசியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஒருவேளை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கிண்ணத்தை வென்றால் இதில் சிறிய மாற்றம் இருக்கும். ரோஹித் சர்மா ஒருவேளை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கிண்ணத்தை வென்று பின்னர் ஓய்வை அறிவித்தால், அதன் பின் பிசிசிஐ அடுத்த அணி தலைவரை நோக்கி நகர்ந்துவிடும்.
ஒருவேளை சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி கிண்ணத்தை வென்று அதன் பின்னரும் ரோஹித் சர்மா தலைவராக தொடர விரும்பினால், அப்போது இது குறித்து பிசிசிஐ நிர்வாகிகள், பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் விவாதிப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலும் ரோஹித் சர்மாவை தாண்டி அடுத்த அணி தலைவரை நோக்கி நகர்வது அவசியம் என இந்திய அணி நிர்வாகம் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. ஏனெனில், அடுத்து இந்திய அணி 2027 ஒருநாள் போட்டி உலகக் கிண்ணத்திற்கு தயாராக வேண்டும். 2 ஆண்டுகளுக்குள் இந்திய அணிக்கு சரியான அணி தலைவரை வளர்த்து எடுக்க வேண்டும்.
தற்சமயம் அதுபோன்ற எந்த ஒரு வீரரும் இல்லாததால், நிச்சயம் ஒரு சிறந்த அணி தலைவரை தயார் செய்வதற்கு இரண்டு ஆண்டுகள் தேவை. மேலும் டெஸ்ட் தொடர்களிலும் ஆளுமை நிறைந்த ஒரு அணி தலைவரை அவசியம். 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு இந்திய அணியை அழைத்துச் செல்லும் அணி தலைவராக அவர் இருக்க வேண்டும்.