Mar 7, 2025 - 04:42 PM -
0
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (JICA) நிதியின் கீழ் இலங்கையின் மேற்கு மண்டலத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த இலகு ரயில் போக்குவரத்து திட்டம் (LRT) தொடர்பாக இதுவரை அரசாங்கம் எந்தவொரு கொள்கை ரீதியிலான முடிவையும் எடுக்கவில்லை என நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.ஈ.எஸ். பண்டார தெரிவித்தார்.
இன்று (07) நடைபெற்ற ஜப்பானிய கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அங்கு கருத்து தெரிவித்த அவர், இந்த திட்டம் தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்துடன் புதிதாக கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த ரயில் திட்டம் அப்போது இருந்த நல்லாட்சி அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், பின்னர் வந்த கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் அதனை ரத்து செய்ய முடிவு செய்திருந்தது.
1.5 பில்லியன் டொலர் ஜப்பானிய சலுகை கடன் திட்டத்தின் மூலம் நிறைவு செய்ய திட்டமிடப்பட்ட கொழும்பு இலகு ரயில் போக்குவரத்து திட்டம் , தலைநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு "பயனுள்ள தீர்வு" அல்ல என குறிப்பிட்டு, (LRT) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ரத்து செய்யப்பட்டது.
இந்த திட்டத்தின் முதல் கட்டத்திற்காக அமெரிக்க டொலர் 285 மில்லியன் கடன் ஒப்பந்தத்தில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (JICA) மற்றும் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நிதி அமைச்சின் செயலாளர் அப்போது கையெழுத்திட்டிருந்தார்.
இந்த கடன் 0.1 சதவீத சலுகை வட்டி வீதத்துடன் 12 ஆண்டு சலுகைக் காலத்துடன் 40 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்று அந்த ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்னர் அந்த ஆட்சி கவிழ்ந்த பின்னர் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் அமைச்சரவையினால், இந்த ரயில் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

