Mar 7, 2025 - 07:04 PM -
0
தாய்லாந்தில் நபர் ஒருவர் வீதியோரக் கடையொன்றில் வாங்கிய "பிளாக் பீன்" ஐஸ்கிரீமில் முழு பாம்பு ஒன்று உறைந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
ரேபன் நக்லெங்பூன் (Rayban Naklengboon) என்ற குறித்த நபர், தாய்லாந்தின் மத்திய ரட்சபுரி பகுதியிலுள்ள பக் தோ என்னும் இடத்தைச் சேர்ந்தவராவார்.
அவர் இது தொடர்பான புகைப்படங்களை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார், அதில் கருப்பு-மஞ்சள் நிற பாம்பின் தலை தெளிவாகத் தெரிகிறது.
இந்நிலையில் குறித்த பதிவு தீயாக பரவி, ஆயிரக்கணக்கான எதிர்வினைகள், கருத்துகள் மற்றும் பகிர்வுகளைப் பெற்றது.
சமூக ஊடக பயனர்கள் இந்த பாம்பு "கோல்டன் ட்ரீ ஸ்நேக்" (Chrysopelea ornata) என்று ஊகித்துள்ளனர், இது அப்பகுதியில் பொதுவாகக் காணப்படும் லேசான விஷத்தன்மை கொண்ட பாம்பு ஆகும். பொதுவாக இந்த வகை பாம்புகள் 70-130 செ.மீ நீளம் வரை வளரும் என்றாலும், ஐஸ்கிரீமில் இருந்தது 20-40 செ.மீ நீளமுள்ள இளம் பாம்பாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சிலர் இதை "கூடுதல் புரதம்" என்று நகைச்சுவையாக கருத்து தெரிவித்தாலும், மற்றவர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார தரம் குறித்து கவலை தெரிவித்து, இதை ஆராய வேண்டும் என்று அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர்.
இந்த ஐஸ்கிரீமை உற்பத்தி செய்த நிறுவனம் எது என்பது தெளிவாகாத நிலையில், இது தாய்லாந்து வீதி உணவு விற்பனையில் சுகாதார நடைமுறைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.