Mar 8, 2025 - 11:43 PM -
0
சமூகத்தில் குழந்தைகள், தாய்மார்கள், பெண்களைப் பார்க்கும்போது, உணவுப் பணவீக்கம், ஊட்டச்சத்து குறைபாடு, வறுமை ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட மிக ஆபத்தான, தீங்கு விளைவிக்கும், பாதகமான பொருளாதார மற்றும் சமூக சுழற்சியில் பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுமிகள் நித்திய கைதிகளாக மாறியிருப்பதைக் காண்கிறோம். பணவீக்க அதிகரிப்பால், அரிசி, தேங்காய், உப்பு போன்ற மனித வாழ்க்கையை பேணிச் செல்லத் தேவையான வசதிகளை தாயும் குழந்தையும் இழந்துள்ளனர்.
வரவு செலவுத் திட்டமானது உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான வசதிகளை ஸ்திரப்படுத்தாத போது, அது நாட்டையே பாதிக்கும் ஒரு தீய சுழற்சிக்கு வழிவகுக்கிறது.
தாய் மற்றும் குழந்தை ஊட்டச்சத்தின்மைக்கு மத்தியில் ஒரு குழந்தை வயதுக்கு வந்து, தாய்மையடைந்து அவரும் ஊட்டச்சத்துக்கு ஆளாகும் போது, ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளையே பிறக்கும். இந்த தொடர்ச்சி சிசுக்கள் மற்றும் தாய்மார்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
2024 இல் காணப்பட்ட 9 ஆவது பாராளுமன்றத்தில் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து விசேட தெரிவுக் குழுக் கூட்டத் தொடர் நடைபெற்றன.
கூட்ட அறிக்கைகளின்படி, ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள், எடை குறைந்த குழந்தைகள், குறைந்த எடை கொண்ட குழந்தைகள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், அதிக எடை கொண்ட குழந்தைகள், இரத்த சோகை, தாய்மார்களின் குறைந்த உடல் நிறை குறியீட்டெண், போதிய நுண்ணூட்டச் சத்துகள் இல்லாததால் குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் எல்லா தரப்பிலிருந்தும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பது வெளிக்கொணரப்பட்டன.
இவற்றில் இருந்து வெளிவருவதற்கு பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்த தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பது மிகவும் முக்கியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் படி, இலங்கை பல்-பரிமாண அபாய நிலைமைகள் மற்றும் குறிகாட்டிகளை எதிர்நோக்கியுள்ளன. நமது நாட்டில் 10 பேரில் 6 பேர் பல ஆபத்துகளுக்கு ஆளாகிறார்கள். தாய், குழந்தைகள் மற்றும் பெண்களே சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருந்து வருகின்றனர்.
இவர்கள் மிகவும் பன்முக அழுத்தங்களுக்கு அவ்வப்போது முகம்கொடுக்கின்றனர்.அனர்த்தங்கள், தொற்றுநோய்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளே வீடு, வேலை, வீதிகள் போன்றவற்றில் கடுமையான கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.
எனவே இது தொடர்பில் தேசிய ரீதியிலான சர்வகட்சி சார் அரசியலற்ற சுயாதீன வேலைத்திட்டமொன்று வகுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டும், இன்று (08) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகாரம் தொடர்பான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
நமது நாட்டில் பழமைவாத முதலாளிகள் காணப்படுகின்றனர். அவர்கள் பெண்களை வேலைக்கு அமர்த்துவது மிகக் குறைவு. ஒரு கணக்கெடுப்பின்படி, பணியிட வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் காரணமாக ஒரு ஊழியர் ஆண்டுக்கு 6 வேலை நாட்களை இழக்கிறார் என வெளிக்கொணரப்பட்டுள்ளது.
இதனால் 1.7 மில்லியன் டொலர்கள் குறைந்த பட்ச செலவை இழக்கிறோம். 75% ஆண்கள் பெண் ஊழியர்களுக்கு எதிராக ஒரு சார்பு நிலைப்பாட்டை வைத்துக் கொண்டு பெண்களை பணியமர்த்துவதை தடுக்கிறார்கள். மேலும் தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்கள் வீட்டுப் பணியாளர்களை உள்ளடக்காது காணப்படுகின்றன. எனவே, வீட்டு வேலைகளில் ஈடுபடும் பணிப் பெண்கள் குறைந்தபட்ச சம்பளத்தை எதிர்பார்க்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
பட்டதாரி ஆட்சேர்ப்பில் 64.7% பெண்கள் உள்வாங்கப்படுகின்றனர். தொழிலாளர்களில் 32% பெண்கள் காணப்படுகின்றனர். 54% பெண்களுக்கே சுயமாக மடிக்கணினி அல்லது ஸ்மார்ட் போனை பயன்படுத்துவது எவ்வாறு என அறிந்து வைத்துள்ளனர்.
டிஜிட்டல் கல்விக்கான அணுகல் சிறுவர்களுக்கு அதிகம். நீதித்துறையில், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் 15 நீதிபதிகளில் ஒரு பெண் கூட இல்லை. கனம் உயர்நீதிமன்ற நீதிபதி உட்பட உயர் நீதிமன்றத்தின் 17 உறுப்பினர்களில் 3 பேர் பெண்கள்.
2019 இல் 37% நிர்வாக பதவிகளில் 16% பெண்கள் நிறைவேற்று தரத்தில் இருந்தனர். இவ்வருடம் பாராளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும் அதனை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொறியியல் மாணவர்களில் 25% பெண்கள் ஆவர். 85% திரை காண்பிப்புகளில் ஆண் 12% பெண் விளையாட்டு வீரர்கள் படங்களில் சித்தரிக்கப்படுகின்றனர். 52% விளம்பரங்களில், இலங்கைப் பெண்கள் ஆணின் சக்தி மற்றும் அறிவு சார்ந்து ஆதரவற்றவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.
இலங்கையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 4% பதிவாகியுள்ளது. இந்நாட்டில் உள்ள பெண்கள் நெருங்கிய துணையால் உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படுவது இரண்டு மடங்கால் அதிகரித்து காணப்படுகின்றன. கற்பழிப்புக்கு ஆளானவர்களில் 87% பேர் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் ஆவார். 2022 இல் கற்பழிப்புச் சம்பவங்கள் (அறிக்கையின் பிரகாரம்) 1986 பதிவாகியுள்ளன. அதாவது ஒரு நாளைக்கு 5 ஆக காணப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
பல்வேறு சர்வதேச சமவாயங்கள் மற்றும் புரிந்துணர்வுகளை இலங்கை ஏற்றுக்கொண்டிருந்தாலும், மாநாடுகள் மற்றும் பயிலரங்குகள் நடத்தப்பட்டாலும், இவை எந்தளவுக்கு நடைமுறையில் காணப்படுகின்றன என்பதைக் கேட்க வேண்டியுள்ளது.
இவை நாட்டின் சட்டமாக மாற்றப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆராய வேண்டும். எனவே அரசியலமைப்பில் திருத்தம் செய்து, அடிப்படை உரிமைகளில் சிறுவர் உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகளை உள்ளடக்குமாறு நான் யோசனை முன்வைக்கின்றேன் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மேலும், நமது நாட்டில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க பல சட்டங்கள் காணப்படுகின்றன. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிர்பார்க்கப்படும் பாதுகாப்பும் இதன் ஊடாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இச்சட்டங்களின் நடைமுறைத் தன்மையை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளன. இது தொடர்பில் பூரண கவனம் செலுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையோடு ஒரு நாடாக இணக்கப்பாடு கண்ட சமவாயங்கள் நாட்டின் பிரதான சட்டத்தில் வலுவாக குறிப்பிடப்பட வேண்டும்.
சிசுக்கள், குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவதற்கு வழிவகுக்கும் தேசிய ஊட்டச்சத்து கொள்கையின் தேவை எமக்கு காணப்படுகுன்றது. நாட்டின் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு நல்ல ஊட்டச்சத்துக்களை வழங்க வேண்டும்.
மேலும், 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு சலுகைகள் போன்றவற்றை வழங்குவதன் மூலம், அரச மற்றும் தனியார் துறைக்கு அதிக செலவு ஏற்படாது. இதன் மூலம், பணியிடத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க முடியும். 32% இல் இருந்து 48% ஆக இதனை அதிகரிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், சிறுவர் மற்றும் பெண்களுக்காக இரண்டு விசேட ஜனாதிபதி செயலணிகளை தாபிக்க வேண்டும். Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்காக ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டதைப் போன்று இதற்கும் உருவாக்க வேண்டும்.
சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் பொதுவான பொறிமுறையொன்று அமைந்து காணப்பட வேண்டும். இதற்கு ஒதுக்கப்படும் பணத்தின் அளவு மற்றும் தரம் குறித்து தொடர் கண்காணிப்பு காணப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இன்று சமூகத்தில் நுண்நிதி மரண பொறியில் அதிகளவிலான பெண்கள் சிக்கியுள்ளனர். இதிலிருந்து பெண்களை மீட்க வேண்டும். பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்காக விசேட திட்டத்தை முன்வைக்க வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலின் போது ஒரு மில்லியன் புதிய தொழில்முனைவோரை உருவாக்கும் வேலைத்திட்டத்தை நான் முன்வைத்தேன். பெண்களை மையப்படுத்தியும் இவ்வாறான வேலைத்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஆரோக்கிய துவாய் வறுமை என்பது சமூகத்தில் பேசப்படாத ஒரு தலைப்பாக இருந்து வந்தது. நான் இது தொடர்பில் பேசியதால் சிறு திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஸ்காட்லாந்து மற்றும் நியூசிலாந்தில் முன்னெடுப்பட்டு வருவது போன்று ஒவ்வொரு பெண்ணையும் மையமாகக் கொண்டு எமது நாட்டிலும் இது முன்னெடுக்கப்பட வேண்டும். இது பெண்ணின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும். எனவே இதற்கு அரசாங்கம் தமது ஆதரவை பெற்றுக் கொடுக்க வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
இலங்கையில் 17910 பாலர் பாடசாலைகள் காணப்படுகின்றனர். இதில் சுமார் 279000 பேர் கல்வி கற்று வருகின்றனர். இந்த முறைசாரா அமைப்பை வலுப்படுத்தவும், முறைப்படுத்தவும் அரசாங்கம் தலையிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
76 ஆண்டுகால வரலாற்றில் நாடு வீழ்ச்சியடைந்ததாக கருத்து தெரிவிக்கின்றனர். 1945 இல் ஆண்களின் ஆயுட்காலம் 46 ஆண்டுகளாக காணப்பட்டாலும், 2021 க்குள் இது 72 ஆண்டுகளாக அதிகரித்து காணப்பட்டுள்ளன.
1945 இல் பெண்களின் ஆயுட்காலம் 44 ஆண்டுகளாக காணப்பட்டன, ஆனால் 2021 இல் இது 80 ஆக அதிகரித்து காணப்படுள்ளன. நாட்டில் காணப்பட்ட சமூக நல அரசுகள் காரணமாகவே இந்த ஆயுட்காலம் அதிகரித்தன. குழந்தை இறப்பு விகிதம் கூட குறைந்து காணப்படுகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார.

