Mar 11, 2025 - 12:16 PM -
0
இந்திய அணியின் அணி தலைவர் ரோஹித் சர்மா, சாம்பியன்ஸ் டிராபி தொடரின் வெற்றிக்குப் பிறகு தான் ஓய்வு பெறப்போவதில்லை என வெளிப்படையாகவே அறிவித்தார். இது இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் திட்டங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறி உள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணிக்கு, ஃபார்மில் இல்லாத ரோஹித் சர்மா அணி தலைவராக இருப்பது சரியாக இருக்குமா? சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தனது மோசமான ஆட்டத்தால் தன்னம்பிக்கை குறைந்து இருக்கும் அணி தலைவர் அணியை வழிநடத்தினால் அது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றெல்லாம் கௌதம் கம்பீர் யோசித்து வந்ததாக பிசிசிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது.
பின்னர் ரோஹித் சர்மா இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சதம் அடித்ததால், அந்த எண்ணத்தில் இருந்து கம்பீர் விடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் சர்மா இந்திய அணியின் அணி தலைவர் செயல்பட்டு, இறுதிப் போட்டியில் 76 ஓட்டங்கள் சேர்த்து வெற்றிக்கும் காரணமாக இருந்தார்.
மேலும், ஓய்வு பெறப் போவதில்லை எனவும் அறிவித்து இருக்கிறார். அதுதான் கம்பீருக்கு தலைவலியாக மாறி உள்ளது. 2027 ஒருநாள் போட்டி உலகக் கிண்ண தொடருக்கு முன் இந்திய அணிக்கு புதிய அணி தலைவரை நியமித்து, அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அணியை புதிதாக கட்டமைக்க வேண்டும் என்ற திட்டத்தில் கௌதம் கம்பீர் இருந்தார். அதற்கு ஏற்ப ரோஹித் சர்மா 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முடிவில் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் ரோஹித் சர்மா, தான் 2027 ஒருநாள் போட்டி உலகக் கிண்ணம் வரை ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இது தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோருக்கு புதிய சவாலாக மாறி உள்ளது.
2027 ஒருநாள் போட்டி உலகக் கிண்ணத்தின் போது ரோஹித் சர்மாவுக்கு 40 வயது ஆகி இருக்கும். 40 வயதான ஒரு அணி தலைவரை வைத்துக்கொண்டு ஒருநாள் போட்டி உலகக் கிண்ணத்தில் விளையாடுவது சரியாக இருக்குமா? என்ற சந்தேகம் அவர்களுக்கு உள்ளது.
ஒருவேளை சுப்மன் கில் அல்லது ஹர்திக் பாண்டியா போன்ற ஒருவரை அணி தலைவராக நியமித்து, ரோஹித் சர்மாவை ஒரு வீரராக மட்டும் ஆட வைக்கலாம். அந்த சூழ்நிலையிலும் 40 வயது வீரரை அணியில் வைத்திருக்க முடியுமா? ரோஹித் சர்மா அப்போது முழு உடல் தகுதியுடன் இருப்பாரா? என்ற சந்தேகங்களும் உள்ளன.
இது மட்டும் இன்றி தற்போது ரோஹித் சர்மா டெஸ்ட் வடிவத்தில் இருந்து ஓய்வு பெறுவாரா அல்லது அதிலும் விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறாரா? என்ற கேள்வியும் உள்ளது. ரோஹித் சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக மோசமாக செயல்பட்டு இருந்தார்.
எனவே ரோஹித் சர்மாவின் முடிவு கௌதம் கம்பீருக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ரோஹித் சர்மா அடுத்ததடுத்து 2024 டி20 உலகக் கிண்ணம் மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி கிண்ணங்களை வென்று கொடுத்து இருப்பதால் ரோஹித்தை வலிந்து அணியில் இருந்து நீக்க முடியாத நிலையும் உள்ளது.

