Mar 14, 2025 - 07:05 AM -
0
பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் வீரரான ஷாஹித் அஃப்ரிடி தான் தன்னை மதம் மாறச் சொன்ன முக்கிய நபர் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரரான டேனிஷ் கனேரியா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் கடந்த 2000 ஆம் அறிமுகமானவர் டேனிஷ் கனேரியா. இவர் 61 டெஸ்ட் போட்டிகளில் 9082 ஓட்டங்களும், 261 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். 11 ஒருநாள் போட்டிகளில் 683 ஓட்டங்களும் 15 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். இருப்பினும், 2012 ஆம் ஆண்டில் ஆட்ட நிர்ணயம் விவகாரத்தில், அவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதால், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தால் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் வீரரான ஷாஹித் அஃப்ரிடி தான் தன்னை மதம் மாறச் சொன்ன முக்கிய நபர் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரரான டேனிஷ் கனேரியா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
44 வயதான டேனிஷ் கனேரியா, அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி-யில் பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் அவலநிலை குறித்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அதைப் பற்றி மனம் திறந்து பேசினார். இது தொடர்பாக டேனிஷ் கனேரியா பேசுகையில், "நாம் அனைவரும் இங்கு கூடி, பாகிஸ்தானில் நாம் எவ்வாறு நடத்தப்பட்டோம் என்பது குறித்த நமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டோம். நாம் பாகுபாட்டை எதிர்கொண்டோம், இன்று, அதற்கு எதிராக குரல் எழுப்பினோம்.
என்னை மதம் மாறச் சொன்ன முக்கிய நபர் ஷாஹித் அப்ரிடிதான், அவர் நிறைய முறை அப்படிச் சொல்லி இருக்கிறார். ஆனால், முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் ஒருபோதும் அப்படிப் பேசியதில்லை.
நானும் நிறைய பாகுபாடுகளைச் சந்தித்திருக்கிறேன். அதனால் எனது வாழ்க்கை அழிந்துவிட்டது. பாகிஸ்தானில் எனது தகுதிக்கு ஏற்ற மரியாதையும் மதிப்பும் சமமாக கிடைக்கவில்லை. இந்தப் பாகுபாட்டின் காரணமாக, நான் இன்று அமெரிக்காவில் இருக்கிறேன். விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அமெரிக்காவிடம் நாம் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதைத் தெரியப்படுத்தவும் நாம் இங்கு பேசினோம், இதன் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும்" என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக ஆஜ் தக் உடனான நேர்காணலில் பேசிய டேனிஷ் கனேரியா, “நான் எனது வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட்டு வந்தேன், கவுண்டி கிரிக்கெட்டிலும் விளையாடி வந்தேன். இன்சமாம்-உல்-ஹக் எனக்கு நிறைய ஆதரவளித்தார், அவ்வாறு செய்த ஒரே கேப்டன் அவர்தான். அவருடன் சேர்ந்து, ஷோயப் அக்தரும் ஆதரவு கொடுத்தார். ஆனால், ஷாஹித் அப்ரிடி மற்றும் பல பாகிஸ்தான் வீரர்கள் என்னை மிகவும் தொந்தரவு செய்தனர், என்னுடன் சாப்பிடவில்லை, ”என்று அவர் கூறினார்.