Mar 14, 2025 - 11:37 AM -
0
இலங்கையின் முன்னணி கம்பி உற்பத்தியாளரான மெல்வா நிறுவனம் அண்மையில் சர்வதேச மகளிர் தினத்தை பெருமிதத்துடன் கொண்டாடியது. நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் உழைப்பையும்,வளர்ச்சிக்கு அளிக்கும் முக்கிய பங்களிப்பையும் அங்கீகரித்து, அவர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கி கௌரவித்தது.
தொழில்பாடு மற்றும் உற்பத்தியில் பெண்கள் வழங்கும் பங்கிற்கு மெல்வா நிறுவனம் தொடர்ந்து உறுதுணையாக இருக்கிறது. மெல்வா நிறுவனம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும், குறிப்பாக அந்நிய செலாவணியை ஈட்டுவதிலும், பெண்கள் வழங்கும் பங்களிப்பை பாராட்டி மகிழ்கிறது. பெண்கள் குடும்பத்திற்கும், நாட்டிற்கும் பொருளாதாரத்தின் உயிர் நாடியாக விளங்குகிறார்கள் என்று நிறுவனத்தால் இம்முறை மகளிர் தினத்தில் வலியுறுத்தப்பட்டது.
சமூகப் பொறுப்பை உணர்ந்து பல்வேறு சமூக நலத்திட்டங்களை மேற்கொள்ளும் மெல்வா நிறுவனம், ஊழியர்களின் பிள்ளைகளுக்கு ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் அப்பியாசக் கொப்பிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்கி வருகிறது. மேலும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் மெல்வா நிறுவனத்தின் முக்கியமான சமூகப் பொறுப்புகளில் ஒன்றாகும். கடந்த 10 ஆண்டுகளில் இந்த திட்டத்தின் மூலம் 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்து தமது கல்வியை சிறப்பாக நிறைவு செய்துள்ளனர்.
சூழல் பாதுகாப்பு, நகர அழகுபடுத்தல் திட்டங்கள், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட தொழில் தகைமைகள் வழங்குதல் ஆகியவற்றிலும் மெல்வா நிறுவனம் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சமூக வளர்ச்சியில் மக்களைக் கொண்டு செல்லும் இந்நிறுவனத்தின் அர்ப்பணிப்பு, இதன் பல்வேறு திட்டங்களில் தெளிவாக பிரதிபலிக்கிறது. இந்த வகையில், மெல்வா நிறுவனம் சமூகத்தை வலுப்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு, மகளிர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடியுள்ளது.