Mar 14, 2025 - 02:25 PM -
0
வெலிவேரியவில் நேற்று (13) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய உதவியாளர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், குறித்த இளைஞன் மீது இதுவரை எந்த குற்றவியல் குற்றச்சாட்டும் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
வெலிவேரிய அரலியகஸ்தெக சந்திப் பகுதியில் நேற்று (13) இரவு 9.10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் 26 வயதுடைய வினோத் தில்ஷான் என்ற இளைஞன் காயமடைந்திருந்தார்.
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாடகைக் காரை செலுத்திவந்த குறித்த இளைஞனிடம், நேற்று இரவு ஒரு சுற்றுலாப் பயணியை காலி பகுதிக்கு அழைத்துச் செல்வதற்காக வெலிவேரியவுக்குச் செல்லுமாறு வாகனத்தின் உரிமையாளர் கோரியுள்ளார்.
அதற்கமைய, அவர் செல்லும் வழியில் இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞன் காயங்களுடன் தனது காரை கம்பஹா வைத்தியசாலைக்கு செலுத்திச் சென்றுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், பலத்த காயங்கள் எவையும் ஏற்படவில்லை எனவும் தெரியவருகிறது.