Mar 14, 2025 - 02:41 PM -
0
அமெரிக்காவில் உயர் கல்வியினைத் தொடர்வது பற்றிய தகவல்களை வழங்கும் அமெரிக்க அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல் வலையமைப்பான EducationUSA, அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் தொடர்பான ஒரு கண்காட்சியினை கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களில் 2025 மார்ச் 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நடாத்தவுள்ளதை அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவுடன் இணைந்து இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறது. இதன்போது இளமானி, பட்டப்பின்படிப்பு மற்றும் கலாநிதி பட்டப்படிப்பு போன்ற கற்கைநெறிகளுக்கான அனுமதியினைப்பெற விரும்பும் மாணவர்கள், அமெரிக்காவிலுள்ள ஒன்பது அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பிரதிநிதிகளை நேரடியாகச் சந்திப்பதற்கான ஒரு வாய்ப்பினைப் பெறுவார்கள்.
மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை/கல்லூரி நிர்வாகிகள் போன்ற அனைவரும் இதில் கலந்து கொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள். பங்கேற்பதற்கு கட்டணம் எதுவும் இல்லை, எனினும் பதிவு செய்தல் அவசியமாகும். மேலதிக தகவல்களுக்கும் பதிவுகளுக்கும் பின்வரும் இணையத்தள முகவரிக்கு பிரவேசிக்கவும்: bit.ly/EducationUSARoadshow2025
இக்கண்காட்சி தொடர்பாக கருத்துரைத்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங், “நிகரற்ற அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் முன்னோடியான ஆராய்ச்சி ஆகியவற்றில் உலகளவில் முன்னணியில் உள்ளன. எதிர்காலத்தை வடிவமைக்கும் மிகச்சிறந்த திறமைசாலிகளதும் அதிநவீன ஆய்வகங்களதும் தாயகமாக எமது கல்விச்சாலை வளாகங்கள் விளங்குகின்றன. சிறந்த திறமைசாலிகளும் புத்தாக்குநர்களும் வளர்த்தெடுக்கப்படும் அமெரிக்காவில் கல்வி கற்க வருமாறு இலங்கையிலுள்ள மாணவர்களுக்கு நான் அழைப்புவிடுக்கிறேன். எமது பல்கலைக்கழகங்கள் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கின்றன. 2023-2024 கல்வியாண்டில் அமெரிக்கக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இணைந்த இலங்கை மாணவர்களின் எண்ணிக்கையானது 10 சதவீதம் அதிகரித்ததையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். எதிர்காலத்தில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென நாங்கள் எதிர்பார்க்கிறோம். அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் வலுவான, பாதுகாப்பான மற்றும் அதிக செழிப்பான ஒரு எதிர்காலத்தினை உருவாக்குவதற்கு பங்களிப்புச் செய்யக்கூடிய தொடர்புகளுக்கு வழிவகுத்து, நடைபெறவுள்ள இந்த EducationUSAஇன் கண்காட்சியானது அமெரிக்காவில் கல்வி கற்பதை நோக்கிய தமது பயணத்தை ஆரம்பிப்பதற்கு இலங்கை மாணவர்களுக்கு உதவுகிறது,” எனக் கூறினார்.
அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் மற்றும் EducationUSA ஆலோசகருடனான கலந்துரையாடல்களானது, கற்கை நெறிகள், அவற்றிற்கான அனுமதி நடைமுறைகள், புலமைப்பரிசில்கள் மற்றும் நிதி உதவி போன்ற விடயங்கள் தொடர்பான பெறுமதியான தகவல்களை வழங்கும். அமெரிக்க உயர்கல்வி குறித்து முன்கூட்டியே தெரிந்து கொண்டு முடிவுகளை எடுப்பதற்கு மாணவர்களுக்கு உதவுவதும், அமெரிக்காவில் கல்வி கற்பது மற்றும் வாழ்வது தொடர்பான ஆழமான புரிதலை வழங்குவதுமே இந்த அமர்வுகளின் இலக்காகும். இலங்கைக் குடியுரிமை கொண்டவர்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய புலமைப்பரிசில் வாய்ப்புகள் பற்றி அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் பணிக்குழு உறுப்பினர்கள் இதன்போது விளக்கமளிப்பார்கள்.
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கல்வி உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பெட்ரிக் மக்னமாரா: “தலைசிறந்த இந்த அமெரிக்கப் பல்கலைக்கழகங்களை இலங்கைக்கு வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களின் பிரதிநிதிகள் மாணவர்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு, தமது கல்வியினை அமெரிக்காவில் மேலும் தொடர்வதற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்கு அவர்களை ஊக்குவிப்பார்கள். இவை எமக்கிடையிலான இருநாட்டு ஒத்துழைப்பையும் உயர்கல்வி தொடர்பான எமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் வலுப்படுத்துகின்றன.” எனக் குறிப்பிட்டார். பின்வரும் அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இக்கண்காட்சியில் கலந்து கொள்வார்கள்:
EducationUSA பற்றி: அமெரிக்காவில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் இலங்கையிலுள்ள மாணவர்களுக்கு இலவச ஆலோசனைச் சேவைகளை EducationUSA வழங்குகிறது. இது 1952 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தன்னாட்சியுடைய, இரு தேசிய அமைப்பான அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் ஒரு இன்றியமையாத பகுதியாகும். கடந்த ஏழு தசாப்தங்களாக, ஃபுல்பிரைட் ஆணைக்குழுவானது இலங்கைக்கும் அமெரிக்காவிற்குமிடையிலான பரஸ்பர புரிந்துணர்வை வளர்த்து, இரு நாட்டையும் சேர்ந்த 2,000இற்கும் மேற்பட்டோரின் கல்விப் பரிமாற்றங்களை எளிதாக்கியுள்ளது. EducationUSA என்பது 175இற்கும் மேற்பட்ட நாடுகளில் 430இற்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர் ஆலோசனை நிலையங்களைக் கொண்ட, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் இயக்கப்படும் ஒரு உலகளாவிய வலையமைப்பாகும். இலங்கையில், அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் கீழ் செயற்படும் EducationUSA ஆனது, EducationUSA ஆலோசகரூடாக வழிகாட்டல்களை வழங்குகிறது.
விண்ணப்பதாரிகள் 4,000இற்கும் மேற்பட்ட அங்கீகரிக்கபட்ட அமெரிக்கக் கல்வி நிறுவனங்களுக்கான விண்ணப்ப நடைமுறைகளைப் பூர்த்திசெய்வதற்கும், விண்ணப்பதாரிகள் தமது கல்விப் பயணத்தைத் திட்டமிடுவதற்கும் அந்த ஆலோசகர் உதவிசெய்கிறார். அமெரிக்காவில் உயர்கல்வி கற்பது தொடர்பான தகவல்களை வழங்கும், இலங்கையிலுள்ள ஒரேயொரு உத்தியோகபூர்வ தகவல்தளம் இதுவாகும்.
இலங்கையிலுள்ள EducationUSA பற்றிய மேலதிக தகவல்களுக்கு https://www.facebook.com/fulbrightsrilanka/ இனைப் பார்வையிடவும்.
இந்நிகழ்வு தொடர்பாக செய்தி சேகரிப்பதில் ஆர்வமுள்ள ஊடகங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியூடாகத் தொடர்பு கொள்ளவும்: Isa@FulbrightSriLanka.org