Mar 16, 2025 - 04:12 PM -
0
மெதிரிகிரிய, திவுலன்கடவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் இடையே ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மெதிரிகிரியவைச் சேர்ந்த ஆறு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் (14) இரவு திவுலன்காடவல ஜனாதிபதி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அறிவித்திருந்த இரண்டு பாடகர்கள் பங்கேற்கத் தவறியதால் இந்த குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இசை நிகழ்ச்சி பாடகர்கள் குழு பங்கேற்புடன் நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் விளம்பரப்படுத்தியிருந்ததோடு, ரூ.1,000 மற்றும் ரூ.2,500க்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்திருந்தனர்.
இருப்பினும், இசை நிகழ்ச்சியில் பங்கேற்க திட்டமிடப்பட்ட இரண்டு பாடகர்களும் நிகழ்ச்சி முடியும் வரையிலும் அதில் பங்கேற்கவில்லை தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், அதிகாலை 1.30 மணியளவில், நிகழ்ச்சி முடிவடையும் என்று அறிவிப்பாளர் அறிவித்த நிலையில், குறித்த இரண்டு பாடகர்களும் வராததால், ஆத்திரமடைந்த பலர் அங்கிருந்த நாற்காலிகள் உட்பட சொத்துக்கள் மற்றும் இசைக்குழுவின் இசைக்கருவிகளைத் தாக்கி சேதப்படுத்தினர்.
சம்பவ இடத்தில் சுமார் 45 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தாலும், அவர்களால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான விசாரணையில், இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வாக்குறுதியளித்த தொகையை செலுத்தாததால், சம்பந்தப்பட்ட இரண்டு பாடகர்களும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பது தெரியவந்ததாக மெதிரிகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.