Mar 16, 2025 - 06:11 PM -
0
தெற்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவில் உள்ள இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 59 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 100 பேர் வரை காயமடைந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் அறிக்கைப்படி, தலைநகர் ஸ்கோப்ஜிக்கு கிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோகானி நகரில் உள்ள 'பல்ஸ்' என்ற இரவு விடுதியில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஒரு பொப் இசைக் குழுவின் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது சில இளைஞர்கள் வாணவேடிக்கை சாதனங்களைப் பயன்படுத்தியதால் மேற்கூரை தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் நிகழ்ச்சிக்காக அங்கு கூடியிருந்த ஏராளமனோர் விபத்தில் சிக்கினர்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காட்சிகளில் இரவு விடுதி கட்டிடம் தீப்பிழம்புகளால் சூழப்பட்டதையும், இரவு வானத்தில் புகை எழுவதும் காணப்படுகிறது.
சம்பவம் நடந்தபோது அங்கு1,500 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.