Mar 17, 2025 - 10:39 AM -
0
Keshara Lime Industries நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்கான உயர் தேசிய கைத்தொழில் வர்த்தகநாம விருது விழாவில் கனியங்கள் மற்றும் அகழ்வு நடவடிக்கைகள் சார்ந்த கைத்தொழில் பிரிவின் (பாரியளவிலான) சிறந்த கைத்தொழில் வர்த்தகநாமத்துக்கான விருதை வென்றுள்ளது. கைத்தொழில் அபிவிருத்தி சபை ஏற்பாடு செய்த மேற்படி விருது விழாவில் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு ஜீவமால் ஜயவர்தன தமக்கான விருதை பெற்றுக்கொண்டார்.
ஜீவமல் ஜயவர்தன 1994 ஆம் ஆண்டு கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியில் மாணவராக இருந்தபோது தனது கிராமத்தில் பொதுவான இயற்கை வளமாக காணப்பட்ட டோலமைட் கனிம வளம் தொடர்பாக நன்கு கற்றறிந்த பின்னர் கேஷர எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை ஆரம்பித்தார். இரண்டு ஊழியர்களுடன் இலங்கையில் முதன்முறையாக சாம்பல் சுண்ணாம்பு உற்பத்தியை ஆரம்பித்து அக் கைத்தொழில்துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தார். 2002 ஆம் ஆண்டு தனியார் கம்பனியாக வளர்ச்சி பெற்ற இந் நிறுவனத்துக்கு 2004 ஆம் ஆண்டில் SLS தரச் சான்றிதழ் கிடைத்தது.
நிறுவனத்தின் உற்பத்திகளில் தூளாக்கப்பட்ட சாம்பல் சுண்ணாம்பு, டைல் பிசின், ஸ்கிம் கோட் மற்றும் டைல் மாஸ்டர் ஆகியவை பிரதானவை ஆகும். மண் வளத்தை மேம்படுத்த வல்ல இந் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் டோலமைட் உரத்துக்கு கமத்தொழில் துறையில் பெரும் கிராக்கி நிலவுகிறது. கேஷர வர்த்தகநாமத்தின் கீழ் மேலும் பல உற்பத்திகள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளன. தற்போது, வெளிநாட்டுச் சந்தையிலும் கேஷர உற்பத்திகளுக்கு பெரும் கிராக்கி நிலவுகிறது. உயர் தரம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவை நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக அமைந்துள்ளன.
சூழல் நேய நடைமுறைகளைப் பின்பற்றி, பொதியிடல் மற்றும் விநியோகத்தில் பிளாஸ்ரிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கு நிறுவனம் சைலோ மற்றும் பல்கர் தாங்கிகளை பயன்படுத்துகிறது.”கடந்த 30 ஆண்டுகளில் இலங்கையின் முன்னணி வர்த்தகநாமங்களின் ஒன்றாக வளர்ச்சி அடைந்தமை எமக்கு கிடைத்துள்ள பெரும் கௌரவமாகும். உற்பத்திகளின் தரத்தை நிலைபேறான முறையில் பேண முடிந்தமையே எமது வெற்றிக்கு பிரதான காரணமாகும். எமது வெற்றிகரமான இப் பயணத்துக்கு துணை நிற்கும் வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் மற்றும் விநியோக முகவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.” என ஜயவர்தன தெரிவித்தார்.