Mar 17, 2025 - 11:28 AM -
0
1996 ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ணத்தை இலங்கை கிரிக்கெட் அணி வெற்றி கொண்டு இன்றுடன் (17) 29 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
1996 ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இடம்பெற்றது.
அர்ஜூன ரணதுங்கவின் தலைமையிலான இலங்கை அணியில் அரவிந்த டி சில்வா, சனத் ஜயசூரிய, ரொமெஷ் களுவித்தாரன, அசங்க குருசிங்க, ரொஷான் மஹானாம, ஹஷான் திலகரத்ன, குமார் தர்மசேன, சமிந்த வாஸ் மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வெற்றிகொண்ட இலங்கை அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
அர்ஜூன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி, 29 வருடங்களுக்கு முன்னர் இதே போன்றதொரு நாளில், பலம் பொருந்திய அவுஸ்திரேலிய அணியை 7 விக்கெட்களால் வெற்றி கொண்டு உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது.
இறுதிப்போட்டி 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி லாகூர் கடாபி விளையாட்டரங்கில் அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அணி சார்பில் டெய்லர் 74 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் அரவிந்தடி சில்வா 3 விக்கெட்டுக்களை கைப்பறினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஒரு கட்டத்தில் 23 ஓட்டங்களுக்குள் 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த குருசிங்க மற்றும் அரவிந்தடி சில்வா மூன்றாவது விக்கெட்டுக்காக 125 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். குருசிங்க ஆட்டமிழந்த போது, களமிறங்கிய அர்ஜூன ரணதுங்க மிகச்சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார்.
அரவிந்தடி சில்வா மற்றும் அர்ஜூன ரணதுங்க இறுதிவரை ஆட்டமிழக்காது முறையே 107 மற்றும் 47 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். இவர்கள் தமக்கிடையே வீழ்த்தப்படாத 94 ஓட்டங்களை பகிர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதியில் 46.2 ஆவது ஓவரில் ரணதுங்க 4 ஓட்டங்களைப் பெறவே இலங்கை அணியின் வெற்றி உறுதியானது.
அதற்கமைய, ஐசிசி ஆறாவது உலகக்கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியது. போட்டியின் நாயகனாக சதமடித்த அரவிந்தடி சில்வாவும் தொடரின் நாயகனாக சனத் ஜயசூரியவும் தெரிவு செய்யப்பட்டனர்.