Mar 18, 2025 - 11:48 AM -
0
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான அமீர் ஜமால், தனது டெஸ்ட் தொப்பியில் '804' என்ற இலக்கத்தை எழுதியதற்காக அந்நாட்டு கிரிக்கெட் சபை பாகிஸ்தானிய ரூபா மதிப்பில் அவருக்குச் சுமார் 1.48 மில்லியன் ரூபா (இலங்கை பெறுமதி) அபராதம் விதித்திருக்கிறது.
முன்னதாக, கடந்தாண்டு ஒக்டோபரில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது, அமீர் ஜமால் 804 என்ற இலக்கம் எழுதியிருந்த தொப்பியை அணிந்திருந்தார். இந்த 804 என்ற இலக்கமானது, சிறையிலிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தானுக்கு ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த முன்னாள் அணித்தலைவரான இம்ரான் கானின் கைதி இலக்கத்தைக் குறிக்கிறது.
இதனால், கிரிக்கெட்டில் அரசியலைக் கொண்டுவந்து இம்ரான் கானை ஆதரித்ததாக அமீர் ஜமாலுக்குப் 1.48 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகத்தான், நடந்து முடிந்த சம்பியன்ஸ் கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணியில் அமீர் ஜமால் சேர்க்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, தங்கள் வீரர்கள் மீது இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது இது முதல் முறையல்ல.
கடந்தாண்டு அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது தாமதமாக வந்ததற்காக சைம் அயூப், சல்மான் அலி அகா, அப்துல்லா ஷஃபிக் உட்படப் பல பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இந்தாண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின்போது, தாமதமாக வந்ததற்காக சுபியான் முகீம், அப்பாஸ் அஃப்ரிடி, உஸ்மான் கான் ஆகியோருக்குத் தலா 200 டொலர் அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.