Mar 18, 2025 - 01:02 PM -
0
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்கள் கடந்த 9 மாதங்களாகச் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவித்தனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 8 நாள் பயணமாக விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர்.
பணி முடிந்த பிறகும், தொழில்நுட்ப காரணங்களால் இரண்டு விண்வெளி வீரர்களும் அங்கேயே சிக்கிக் கொள்கிறார்கள். தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக அவர் திரும்பி வருவதும் பல முறை தாமதமானது. இப்போது அவர் இறுதியாக இன்று அல்லது நாளைக்குள் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் பூமிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களுக்குப் பதிலாக, தற்போது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ-10 விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றுள்ள ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் அங்கு பணிகளைத் தொடர்வார்கள்.
நாசா ஏற்கனவே அறிவித்தபடி, இந்திய நேரப்படி இன்று காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு புறப்படுவதற்கு சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நால்வரும் தயாராகி வருகிறார்கள். அதற்காக, ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் , புட்ச் வில்மோர், நிக் ஹாக் மற்றும் ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் தங்கள் பொருட்களுடன் இருக்கைகளில் தயாராகும் வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது. அதற்கு முன்னதாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்களுடன் உடன் பணிபுரிந்த மற்றும் புதிதாக இணைந்துள்ள வீரர்களுக்கு அவர்கள் விடை கொடுத்தனர்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினர் தத்தமது இருக்கைகளில் அமர்ந்து, தயாரானதும் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்து பூமியை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது. நாசா திட்டமிட்டிருந்தபடி, இந்திய நேரப்படி சரியாக காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்கலம் பிரிந்தது.
விண்கலம் தற்போது பூமியை நோக்கிய சுமார் 17 மணி நேர பயணத்தில் உள்ளது. சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேருடன் அந்த விண்கலம் இந்திய நேரப்படி நாளை (19/03/2025) அதிகாலை 3.27 மணிக்கு பூமியை வந்தடையும். இதற்கான நேரலையை இந்திய நேரப்படி நாளை (19/03/2025) அதிகாலை சுமார் 2.15 மணியளவில் நாசா ஆரம்பிக்கிறது.
சுனிதா வில்லியம்சும், புட்ச் வில்மோரும் போயிங் ஸ்டார்லைனர் மூலமாக ஜூன் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர். அவர்களுடன் பூமிக்குத் திரும்பும் ஹேக், கோர்புனோவ் ஆகிய இருவரும் 6 மாத பயணமாக ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் மூலம் கடந்த செப்டம்பரில் அங்கு சென்றனர். திட்டக்காலம் நிறைவடைந்துவிட்டதால் அவர்களும் சுனிதா, வில்மோருடன் இணைந்து பூமிக்குத் திரும்புகின்றனர். அவர்களை பூமிக்கு அழைத்து வரும் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் கலத்தில் 4 இருக்கைகள் உள்ளன.
சுனிதா வில்லியம்ஸ் பயணம் - கால அட்டவணை
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினர் பூமிக்குத் திரும்புவது எப்போது என்பது குறித்த கால அட்டவணையை நாசா வெளியிட்டுள்ளது. (இலங்கை நேரப்படி விபரங்கள் தரப்பட்டுள்ளன)
மார்ச் 18
காலை 8:15 மணி - சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மற்றும் மற்ற குழுவினர் டிராகன் விண்கலத்திற்குள் செல்வார்கள்.
காலை 10:35 மணி - டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு பிரியும் (Undocking)
மார்ச் 19
அதிகாலை 2:15 மணி - பூமிக்கு திரும்புவதற்கான பயணம் NASA+ இல் நேரடி ஒலிபரப்பு செய்யப்படும்
அதிகாலை 2:41 மணி - விண்கலம் அதன் சுற்றுப்பாதையிலிருந்து பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்
அதிகாலை 3:27 மணி - விண்கலத்தின் வேகம் குறைந்து, பாரசூட்டுகள் விரிக்கப்பட்டு பாதுகாப்பாக கடலில் இறங்கும்
காலை 05:00 மணி - பூமிக்கு அவர்கள் திரும்பிய பிறகு நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திப்பார்கள்
(குறிப்பு - மேற்குறிப்பிட்ட நேரங்களில் மாற்றம் ஏற்படலாம்)