Mar 20, 2025 - 04:37 PM -
0
சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு 58 கோடி ரூபா (இந்திய பெறுமதி) பரிசு வழங்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
இந்த வருடம் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் டுபாயில் நடைபெற்றது. குரூப் சுற்றில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்து அரையிறுதியில் அவுஸ்திரேலியா அணியையும், இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியையும் வீழ்த்தி 2025 சம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றியது.
இறுதிப் போட்டியில் அதிகபட்சமாக அணித்தலைவர் ரோஹித் சர்மா 76 ஓட்டங்களைப் பெற்றார். அவரே ஆட்ட நாயகனாவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ. 58 கோடி ரூபா பரிசுத் தொகை அறிவித்துள்ளது. இது இந்த தொடரில் இடம்பெற்றிருந்த வீரர்கள்,பயிற்சியாளர்கள், ஊழியர்கள் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்களை கௌரவிக்கும் விதமாக வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிசிசிஐ செயலாளர் சைக்யா, "இந்த அளவுக்கு இந்திய அணியின் செல்வாக்கிற்கு காரணம் அவர்களது கடின உழைப்பு, திறமையான வெளிப்பாடு. இந்த வெற்றி இந்தியாவின் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் உயர் தரத்தில் இருப்பதை உறுதி செய்துள்ளது. அடுத்த வருடங்களிலும் இதை இந்திய அணி தொடரும் என்பதை உறுதியளிக்கிறேன்" என்றார்.