Mar 24, 2025 - 11:27 AM -
0
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற சென்னை அணி களத்தடுப்பை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை பெற்றது.
இதனையடுத்து 156 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் சென்னை அணி பந்து வீசும் போது போல் டேம்பரிங் செய்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் கலீல் அகமது தனது பாக்கெட்டில் இருந்து ஏதோ ஒரு பொருளை தலைவர் ருதுராஜ் கையில் கொடுப்பார். அதனை வாங்கி கொண்ட ருதுராஜ், மறைத்து தனது பாக்கெட்டில் வைத்துக் கொள்வார்.
இந்த வீடியோவை வைத்து மும்பை ரசிகர்கள் உள்பட ஐபிஎல் ரசிகர்கள் சென்னை அணி போல் டேம்பரிங் செய்ததாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே சூதாட்டத்தில் சிக்கியதாக 2 ஆண்டு சிஎஸ்கே அணி விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது.
தென் ஆப்பிரிக்கா - அவுஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியில் போல் டேம்பரிங் செய்ததாக பான்கிராப்ட்டிற்கு 9 மாத தடையும் வோர்னர் மற்றும் ஸ்மித்திற்கு தலா ஓராண்டு தடையும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.