செய்திகள்
19 சொகுசு வாகனங்கள் குறித்து விசாரணைக்கு அனுமதி

Mar 25, 2025 - 05:11 PM -

0

19 சொகுசு வாகனங்கள் குறித்து விசாரணைக்கு அனுமதி

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் தரவு முறைமையில் போலியான தகவல்களை உள்ளீடு செய்து பதிவு செய்யப்பட்டு, சுங்கத்திற்கு செலுத்த வேண்டிய உரிய வரி தொகையை செலுத்தாமல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 19 சொகுசு வாகனங்களை பறிமுதல் செய்து, விசாரணை நடவடிக்கைகளுக்காக சுங்கத்தின் பொறுப்பில் ஒப்படைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (25) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டது.


இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் தனூஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்தார்.


இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்து, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் தரவு முறைமையில் போலியான தகவல்களை உள்ளீடு செய்து பதிவு செய்து, சுங்கத்திற்கு செலுத்த வேண்டிய உரிய வரித் தொகையை செலுத்தாமல், அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 19 வாகனங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.


அந்த வாகனங்களை பறிமுதல் செய்து, சுங்கத்தின் பொறுப்பில் ஒப்படைத்து விசாரணை நடத்துவதற்கு அனுமதி வழங்குமாறு அந்த அதிகாரி நீதிமன்றத்திடம் கோரினார்.


முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த பிரதான நீதவான், சம்பந்தப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை நடவடிக்கைகளுக்காக சுங்கத்தின் பொறுப்பில் ஒப்படைப்பதற்கு அனுமதி வழங்கினார்.


2015 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், இவ்வாறு மோசடியான முறையில் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 200 சொகுசு வாகனங்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட வரி இழப்பு 500 கோடி ரூபாய்க்கு அதிகமாகும் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட 200 வாகனங்களில், இதுவரை 16 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சுங்கத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05