Mar 26, 2025 - 09:25 AM -
0
இலங்கையில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கவுன்சில் ஆனது பொதுநலவாய மற்றும் செவனிங் நிதியுதவியை பெற்று ஐக்கியராஜ்ஜியத்தில் உயர் கல்வியை பூர்த்தி செய்து நாடு திரும்பிய இலங்கை கல்வியியலாளர்களின் சமீபத்திய தொகுதியினரை வரவேற்கும் முகமாக அதன் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வினை அண்மையில் நடத்தியது.
இந்த ஆண்டு நிகழ்வானது கொழும்பு பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டதுடன் இது பொதுநலவாய புலமைப்பரிசில் உதவித்தொகைகளின் 65 வது ஆண்டு நிறைவாக திகழ்ந்ததுடன் மேலும் இது பொது நலவாய தினத்தன்று நடைபெற்றது.அத்துடன் இது பொதுநலவாய மற்றும் செவனிங் கல்வியியலாளர்கள் ஆகிய இரு தரப்பினரையும் கொண்டாடும் வகையில் அவர்களை சொந்த நாட்டிற்கு வரவேற்கும் நிகழ்வாக அமைந்திருந்தது. இந்த பொது நலவாய செவெனிங் புலமைப்பரிசில் நிதிஉதவியானது உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளிலும் உள்ள கல்வியியலாளர்கள் ஐக்கிய ராஜ்ஜியத்தில் தமது உயர் கல்வியைத் தொடர உதவுகின்றது.
இந்நிகழ்வினில் பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் மேன்மை தங்கிய ஆண்ட்ரூ பேட்ரிக், இலங்கைபிரிட்டிஷ் கவுன்சிலின் வதிவிடப்பணிப்பாளர் ஆர்லாண்டோ எட்வர்ட்ஸ், வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி (FCDO) மற்றும் மார்ஷல் உதவித்தொகை பிரிவின் கொள்கைத்தலைவர் பிலிப்ஸ் எவெரெஸ்ட் பொதுநலவாய மற்றும் செவனிங் புலமைப்பரிசில் உதவித்தொகை பெற்ற முன்னாள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொதுநலவாய தினமானது இந்த ஆண்டு மார்ச் 10 ஆம் திகதியன்று 56 பொதுநலவாய அங்கத்துவ நாடுகளில் 'ஒன்றாக நாம் சுபிட்சமடைகிறோம் ' என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடப்பட்டது, இது ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் வாய்ப்பு மற்றும் மீளெழுச்சியினால் வரையறுக்கப்பட்ட எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
பொதுநலவாயத்தின் தலைவரான மாட்சிமை பொருந்திய மன்னர், பொதுநலவாய தினம் தொடர்பாக விடுத்துள்ள செய்தியில் உலகம் முழுவதிலுமிருந்து மக்களை ஒன்றிணைக்கும் பொதுநலவாயத்தின் திறனானது பல சவால்களின் மத்தியில் இன்றும் எப்போதும் போலவே முக்கியமானதாக உள்ளது . இந்த பொதுநலவாயத் தினத்தை நாம் ஒன்றாகக் கொண்டாடும் இந்த தருணத்தில், நமது முழுஉலகத்தினதும் சீர்குலைந்த நல்லிணக்கத்தை மீட்டெடுப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நாம் செயற்பட வேண்டும். எமது இளைய தலைமுறையினரின் சவால்கள் பொருந்திய எதிர்காலத்திற்காக, அந்த நல்லிணக்கத்தை மீட்டெடுப்பதில் பொதுநலவாயமானது தொடர்ச்சியாக தனது பணியை முன்னெடுக்கும் என நான் நம்புகிறேன்.
பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் மேன்மை தங்கிய ஆண்ட்ரூ பேட்ரிக் தெரிவிக்கையில், “நீங்கள் உங்கள் உயர் கல்வியை பூர்த்தி செய்ய ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு சென்று அங்கு பணி அனுபவத்தைப் பெற்று நாடு திரும்பி வரும் பட்சத்தில், அடுத்த 20-30 ஆண்டுகளில் இந்தப் பகுதி வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியின் மையமாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்‘’ என்றார்.
இலங்கை பிரிட்டிஷ் கவுன்சிலின் வதிவிடப் பணிப்பாளர் ஆர்லாண்டோ எட்வர்ட்ஸ் தெரிவிக்கையில் “பிரிட்டிஷ் கவுன்சில் தலைமுறை தலைமுறையாக இலங்கை மாணவர்கள்/ கல்வியியலாளர்கள் உலகத் தரம் வாய்ந்த கல்வியைப் பெறவும், அவர்களின் அறிவை இலங்கையின் நலனுக்காகப் பயன்படுத்தவும் வாய்ப்பளித்து வந்துள்ளது. பொதுநலவாய கல்வியியலாளர்கள் பொறியியலாளர்களுக்கு நிகராக அபிவிருத்திக்கான அடித்தளங்களை கவனமாகக் கட்டமைக்கும் அதே வேளை செவனிங் கல்வியியலாளர்களே இங்கு கட்டிடக் கலைஞர்களை ஒத்ததாக செயற்படுகின்றனர். இந்த கல்வியியலாளர்களில் பலர் தற்போது அரசாங்க மற்றும் தனியார் இடைநிலைக் கல்வி நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் உள்ளனர்.”
இந்நிகழ்வினில் மொத்தமாக, ஆறு பொதுநலயாய கல்வியியலாளர்களுக்கும் ஏழு செவனிங் கல்வியியலாளர்களுக்கும் அதிமேதகு ஆண்ட்ரூ பேட்ரிக் மற்றும் பிலிப் எவரெஸ்ட் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர். 2024 ஆம் ஆண்டு நாடு திரும்பிய கல்வியியலாளர்கள் சட்டம், பொறியியல் மற்றும் சர்வதேச அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதுகலை பட்டத்தை பூர்த்தி செய்துள்ளனர்.
இந்த நிகழ்வில் ஐந்து பொதுநலவாய மற்றும் செவனிங் கல்வியியலாளர்கள் பங்கேற்ற குழு விவாதம் ஒன்றும் இடம்பெற்றது. ஐந்து குழு உறுப்பினர்களும் தங்கள் தொழில்முறை வளர்ச்சி, தாம் பெற்ற திறன்கள் மற்றும் நிபுணத்துவம் உட்பட, அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி, முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளல் மற்றும் அவர்கள் வெளிநாட்டில் தங்கள் புதிய வாழ்க்கையை எவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள் என்பது பற்றிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டனர். புதிதாகப் பெற்ற அறிவு மற்றும் அனுபவத்தை அந்தந்த நிறுவனங்களிலும், பொதுவாக இலங்கையிலும் நேர்மறையான மாற்றம் மற்றும் புதுமைகளை மேற்கொள்ள பயன்படுத்த திட்டமிட்டுள்ளமை குழு உறுப்பினர்கள் விவாதித்தனர்.
பொதுநலவாய புலமைப்பரிசில் உதவித்தொகை திட்டம் 1959 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம், இலங்கையைச் சேர்ந்த 1,100 க்கும் மேற்பட்ட திறமையான இலங்கை கல்வியியலாளர்கள் ஐக்கியராஜ்ஜியத்தில் உள்ள மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களில்உயர் கல்வியை தொடர உதவியுள்ளது. பொதுநலவாய புலமைப்பரிசில் உதவித்தொகைக்கான விண்ணப்ப செயல்முறை உதவித்தொகை வகையைப் பொறுத்து மாறுபடும். விண்ணப்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் மே/ஜூன் மாதங்களில் கோரப்படுகின்றன . மேலதிக தகவல்களுக்கு https://cscuk.fcdo.gov.uk/ மற்றும் https://www.chevening.org/scholarships/ ஐப் பார்வையிடவும்.
பிரிட்டிஷ் கவுன்சில் பற்றி
பிரிட்டிஷ் கவுன்சில் என்பது ஐக்கியராஜ்ஜியத்தில் அமைந்துள்ள கலாசார உறவுகள் மற்றும் கல்வி வாய்ப்புகளுக்கான சர்வதேச அமைப்பாகும். இது ஐக்கியராஜ்ஜியத்திலும் உலகெங்கிலும் உள்ள நாடுகளிலும் வாழும் மக்களிடையே தொடர்புகள், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை உருவாக்குவதன் மூலம் அமைதியும் சுபிட்சமும் தழைத்தோங்குவதற்கான சேவையை வழங்கி வருகிறது. கலை மற்றும் கலாசாரம், கல்வி மற்றும் ஆங்கில மொழி ஆகியவற்றின் ஊடாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அமைப்பினர் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள மக்களுடன் இணைந்து பணியாற்றுவதுடன் மற்றும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் களத்தில் உள்ளனர். 2021–22 இல் பிரிட்டிஷ் கவுன்சில் 650 மில்லியன் மக்களை சென்றடைந்தது. மேலும் தகவல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும்: www.britishcouncil.lk