Mar 26, 2025 - 09:35 AM -
0
சர்வதேச அளவில், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளின் தரவரிசைப்பட்டியலில் 1 ம் இடத்திலுள்ள பந்து வீச்சாளராக அண்மையில் சாதனை படைத்த மஹீஷ் தீக்ஷன அவர்களைக் கௌரவிக்கும் முகமாக அமில களுகலகே அவர்களுடன் இணைந்து பாராட்டு வைபமொன்றை The Residences at Cinnamon Life ல் John Keells Properties ஏற்பாடு செய்துள்ளது. இலங்கையின் தேசிய கிரிக்கெட் வீரர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்ததுடன், நாட்டின் முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழும் தீக்ஷனவுக்கு அங்கீகாரமளித்து, கொண்டாட்டங்களும், தோழமையுணர்வும் நிரம்பிய மாலைப்பொழுதாக அமையப்பெற்றது.
இலங்கையில் மிகவும் ஆடம்பரமான இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், புகழ்பூத்த கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரிய, இலங்கை கிரிக்கெட் சபையின் பிரமுகர்கள், சக கிரிக்கெட் வீரர்கள், மதிப்பிற்குரிய விருந்தினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர். இந்த பிரத்தியேக ஒன்றுகூடல் நிகழ்வில் தீக்ஷன படைத்துள்ள மிகச் சிறந்த சாதனைகள் நினைவுகூரப்பட்டது மாத்திரமன்றி, அனைத்து துறைகளிலும் சிறந்த சாதனைகளை நிலைநாட்டுகின்றவர்களைப் போற்றிப் பாராட்டுவதில் John Keells Properties கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் இது எடுத்துக்காட்டியுள்ளது.
இது வரையான தனது பயணம் மற்றும் தற்போது நிலைநாட்டியுள்ள இச்சாதனை குறித்து தனது நன்றிகளை வெளிப்படுத்தி கருத்து தெரிவித்த மஹீஷ் தீக்ஷன அவர்கள்:
“ஐசிசியின் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தரப்படுத்தலில் 1 ம் இடத்திலுள்ள பந்து வீச்சாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளமை மாபெரும் கௌரவமாகும். எனது பயணத்தின் போது எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நான் மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ளேன். எனது பயணம் அர்ப்பணிப்பையும், கற்றலையும் எனக்கு பாரியளவில் வழங்கியுள்ளதுடன், எனக்கு எப்போதும் தோளோடுதோளாக நின்ற அணியின் சக வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் எனது விசிறிகள் உள்ளிட்ட அனைவரும் இந்த வெற்றிக்கு காரணமானவர்கள். John Keells Properties உடன் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து, The Residences at Cinnamon Life ல் அற்புதமான கொண்டாட்டமாக இதனை மாற்றியுள்ள எனது முகாமைத்துவ அணிக்கு நான் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எனது அணி வீரர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து இச்சாதனையை ஒன்றாகக் கொண்டாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தமை மறக்க முடியாத ஒரு அனுபவமாகும்.”
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் தனது கடந்தகால பயணம், சவால்கள் மற்றும் அபிலாஷைகள் அனைத்தையும் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்ட தீக்ஷன இம்மாலைப்பொழுதை அனைவரது இதயங்களையும் வருடும் தருணமாக மாற்றினார். அவர் உச்சத்திற்கு எழுச்சி கண்டுள்ளமை அனைவருக்கும் மிகச் சிறந்த உத்வேகத்தை வழங்கும் ஒன்றாகக் காணப்படுவதுடன், தற்போது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் உள்ள மிகச் சிறந்த திறமைகளைக் கொண்ட வீரர்களில் ஒருவராகவும் அவரை மாற்றியுள்ளது. ஜோன் கீல்ஸ் குழுமத்தின் உப தலைவரும், John Keells Properties ன் விற்பனைகள் மற்றும் சந்தைப்படுத்தலுக்கான தலைமை அதிகாரியுமான நதீம் ஷம்ஸ் அவர்கள் இந்நிகழ்வில் உரையாற்றுகையில், இலங்கையின் விளையாட்டு நட்சத்திரங்களை கௌரவிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டினார்:
“விளையாட்டு, வியாபாரம் அல்லது வாழ்க்கைமுறை என எதுவாக இருந்தாலும், மகத்துவத்தையும், மேன்மையையும் போற்றிக் கொண்டாடுவதில் John Keells Properties எப்போதும் பெருமை கொள்கின்றது. எமது செயற்பாடுகள் அனைத்திலும் நாம் பின்பற்றுகின்ற விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பு ஆகிய விழுமியங்களுக்கு மஹீஷ் அவர்களின் சாதனை மிகச் சிறந்த சான்றாக உள்ளது. வெற்றிச் சாதனை படைத்தவர்களையும், தொலைநோக்கு சிந்தனையாளர்களையும் நாம் வரவேற்கின்ற The Residences at Cinnamon Life ல் இந்நிகழ்வை நடாத்த வாய்ப்புக் கிடைத்தமை பெரும் பாக்கியம். மஹீஷ் அவர்கள் சர்வதேச அரங்கில் மென்மேலும் சாதனைகளைப் படைத்து, இலங்கைக்கு தொடர்ந்தும் பெருமை தேடித்தருவார் என நாம் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்.”
இலங்கையின் அதிசொகுசு வாழ்விடமான The Residences at Cinnamon Life, இந்த விசேட நிகழ்வை நடாத்துவதற்கான மிகவும் நேர்த்தியான வசதிகளையும், ஏற்பாட்டையும் வழங்கியுள்ளது. வியப்பூட்டும் தோற்றங்கள், உலகத்தரம் வாய்ந்த வசதிகள், மற்றும் ஒப்பற்ற நேர்த்தி ஆகியவற்றை ஒருங்கே கொண்டுள்ள இந்த இடம், இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றில் பொறிக்கப்படவுள்ள ஒரு சாதனையைக் கொண்டாடுவதற்கான சிறந்த பின்னணியை வழங்கியுள்ளது.
இந்நிகழ்வானது தீக்ஷன அவர்களின் வெற்றி வரலாறு கிரிக்கெட் உலகிற்கும் அப்பால் எதிரொலித்து, ஒட்டுமொத்தமாக எமது தேசத்திலுள்ள வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு உத்வேகமாகக் காணப்படுகின்றது. இலங்கையில் வெற்றிச் சாதனைகளை நிலைநாட்டுகின்றவர்களின் அபிலாஷைகளுடன் ஆழமாகப் பின்னிப்பிணைந்துள்ள ஒரு வர்த்தகநாமம் என்ற தனது ஸ்தானத்தை மீளவும் உறுதிப்படுத்திவாறு, அனைத்து துறைகளிலும் மகத்துவத்தையும், மேன்மையையும் அங்கீகரித்து, கௌரவிப்பதில் John Keells Properties தனது அர்ப்பணிப்பை இந்த மாலைப்பொழுதில் மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.
எதிர்காலம் ஆற்றல் நிறைந்ததாக உள்ள நிலையில், மஹீஷ் தீக்ஷன அவர்களின் பயணம் வெறும் ஆரம்பமாக காணப்படுவதுடன், சர்வதேச அரங்கில் அவர் தொடர்ந்தும் பிரகாசிப்பதற்கு ஒட்டுமொத்த இலங்கையும் அவருக்கு பின்னால் வலுவாக அணிதிரண்டுள்ளது.