Mar 26, 2025 - 10:09 AM -
0
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 3ஆம் திகதி இரவு டுபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 14 கிலோ 800 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், சி.பி.ஐ. மற்றும் அமுலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்கம் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவின் நண்பரும், தெலுங்கு நடிகருமான தருண் ராஜு கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது நடிகை ரன்யா ராவ், தருண்ராஜு ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், தங்கம் கடத்தல் வழக்கில் பிணை கோரி பெங்களூரு நகர சிவில் மற்றும் செசன்சு நீதிமன்றில் நடிகை ரன்யா ராவ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, நடிகை ரன்யா ராவ் தங்கம் வாங்குவதற்காக ஹவாலா மூலம் பண பரிமாற்றம் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அவருக்கு பிணை வழங்கக்கூடாது என ஆட்சேபனை தெரிவித்து வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து நடிகை ரன்யா ராவின் பிணைமனு மீது நாளை (27) தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.