Mar 26, 2025 - 03:01 PM -
0
உலகக்கிண்ண கால்பந்து தொடரில் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய நேரப்படி இன்று (26) அதிகாலை நடைபெற்ற போட்டியில் ஆர்ஜென்டினா- பிரேசில் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. காயம் காரணமாக ஆர்ஜென்டினா அணியில் மெஸ்சி இடம்பெறவில்லை.
போட்டி தொடங்கிய 4ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டினா வீரர் ஜூலியன் அல்வாரஸ் முதல் கோலை பதிவு செய்தார். 17ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டினா மேலும் ஒரு கோல் அடித்தது. இந்த கோலை என்ஜோ பெர்னாண்டஸ் அடித்தார். 26ஆவது நிமிடத்தில் பிரேசில் அணியின் மேத்யூஸ் குன்ஹா கோல் அடித்தார். இருப்பினும் ஆர்ஜென்டினா 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது.
37ஆவது நிமிடத்தில் அலெக்சிஸ் மெக் அலிஸ்டர் கோல் அடிக்க முதல் பாதி நேர ஆட்டத்தில் ஆர்ஜென்டினா 3-1 என முன்னிலைப் பெற்றது.
2ஆவது பாதி நேர ஆட்டத்திலும் ஆர்ஜென்டினா அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. 71ஆவது நிமிடத்தில் கியுலியானோ சிமியோன் கோல் அடிக்க ஆர்ஜென்டினா 4-1 என முன்னிலைப் பெற்றது. பின்னர் ஆட்ட நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆர்ஜென்டினா 4-1 என வெற்றி பெற்றது.
தென்அமெரிக்கா கண்டத்தில் உள்ள அணிகள் தகுதிச்சுற்றில் விளையாடி வருகிறது. இதன் புள்ளிகள் பட்டியலில் ஆர்ஜென்டினா 14 போட்டிகளில் 10இல் வெற்றி, ஒரு சமநிலை, 3 தோல்வியுடன் 31 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. பிரேசில் 6 வெற்றி, 3 சமநிலை, 5 தோல்வியுடன் 21 புள்ளிகள் பெற்று 4ஆவது இடத்தில் உள்ளது.