Mar 27, 2025 - 10:35 AM -
0
உள்நாட்டு தொழிற்துறைகள் எதிர்நோக்கியுள்ள தற்போதைய சவால்களை மதிப்பீடு செய்யவும், அரசாங்கத்தினால் உதவிகள் வழங்கப்படக்கூடிய வழிமுறைகள் பற்றி ஆராயும் நோக்கிலும், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, Lumala என பரவலாக அறியப்படும், சிட்டி சைக்கிள் இன்டஸ்ட்ரீஸ் மெனுபக்ஷரிங் (பிரைவட்) லிமிடெட்டின் பாணந்துறையில் அமைந்துள்ள தொழிற்சாலைக்கு மார்ச் 24 ஆம் திகதி விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்த விஜயத்தின் போது, நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் அமைச்சர் ஹந்துன்னெத்தி கலந்துரையாடி, செயற்பாடுகள் தொடர்பில் காணப்படும் பிரச்சனைகள் பற்றி அறிந்துகொண்டார். சமூக ஊடகங்களில் பகிர்ந்த அறிக்கையில், இலங்கையின் உற்பத்தித் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பிரச்சனைகள் பற்றி அமைச்சர் குறிப்பிட்டுள்ளதுடன், அரசாங்கத்தின் தலையீட்டினூடாக துரித மற்றும் வினைத்திறனான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தில் பிரதான பங்காளர்களாக உள்நாட்டு உற்பத்தியாளர்களை திகழச் செய்யும் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு பற்றி அமைச்சர் ஹந்துன்னெத்தி மேலும் விளக்கமளித்ததுடன், அதற்காக ஒழுங்குபடுத்தல் தடைகள், சந்தை சமநிலையின்மைகள் மற்றும் விநியோக சங்கிலி தடைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுமெனவும் குறிப்பிட்டார்.
பெருமளவு சவால்களுக்கு முகங்கொடுக்கின்றமை மற்றும் பெருமளவு சைக்கிள்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் ஒழுங்குபடுத்தல் பரிசோதனைகள் இன்றி இறக்குமதி செய்யப்படுகின்றமை காரணமாக, இலங்கையின் சைக்கிள் உற்பத்தித் தொழிற்துறையின் நிலை தொடர்பில் Lumala ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் பொது மக்களின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்த நிலையில் இந்த விஜயம் இடம்பெற்றது. மேலும், உள்நாட்டு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மீதான உயர்ந்த வரி விதிப்பு காரணமாக உற்பத்திச் செலவு பெருமளவு அதிகரித்துள்ளமையால், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு போட்டிகரத்தன்மையாக திகழ்வதற்கு கடினமான சூழல் எழுந்துள்ளது.
ஆண்டின் முற்பகுதியில், இந்த சவால்கள் தொடர்பில் அரசாங்கம் தலையிட்டு கவனம் செலுத்துமாறு Lumala ஊழியர்கள் அழைப்புவிடுத்திருந்தனர். தற்போதைய நிதிசார் நெருக்கடி காரணமாக, முக்கியமான உற்பத்தி பிரிவுகள் மூடப்பட்டு, தொழில் இழப்புகள் மற்றும் பரந்தளவு தொழிற்துறை கட்டமைப்பில் சீர்குலைவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் பற்றியும் விளக்கியிருந்தனர். அமைச்சினால் உறுதி செய்யப்பட்ட உள்நாட்டு பெறுமதி சேர்ப்பு 50 – 70 சதவீதமாக அமைந்திருக்கும் நிலையில், ஒழுக்கமான உற்பத்தித் துறையை எய்துவதற்கு அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உதவியாக அமையும் என்பதில், நிறுவனத்தின் ஊழியர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இலங்கையின் சைக்கிள் துறையில் புகழ்பெற்ற நாமமாக திகழும் Lumala, 35 வருடங்களுக்கு மேலாக நிலைபேறான போக்குவரத்து தீர்வுகளை வழங்குவதில் முக்கிய செயற்பாட்டாளராக அமைந்துள்ளது. அண்மையில் தேசிய தொழிற்துறை வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2024 இல், பாரியளவு இதர தொழிற்துறை பிரிவில், நிறுவனம் அண்மையில் சிறந்த தேசிய தொழிற்துறை வர்த்தக நாம விருதை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாளாந்தம் 2000 சைக்கிள்களை உற்பத்தி செய்யும் கொள்ளளவையும், 200க்கும் அதிகமான ஊழியர்களையும் கொண்டுள்ள Lumala, உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு தொடர்ந்தும் சேவைகளை வழங்குவதுடன், பரந்தளவு சைக்கிள்கள், மின் சைக்கிள்கள் மற்றும் எளிய எடை கொண்ட மின் வாகனங்கள் உற்பத்தியை மேற்கொள்கிறது. 2030 ஆம் ஆண்டளவில் வனாந்தர பரப்பை 32 சதவீதத்தினால் அதிகரிப்பது மற்றும் பச்சை இல்ல வாயு வெளியேற்றத்தை 14.5 சதவீதத்தினால் குறைப்பது போன்ற இலங்கையின் இலக்குகளில், நிறுவனம் எனும் வகையிலும், தனது பரந்த தயாரிப்புகளினூடாகவும் Lumala தனது பங்களிப்பை வழங்குகிறது.
உள்நாட்டு உற்பத்தி தொழிற்துறையை வலிமைப்படுத்துவதில் இலங்கை கவனம் செலுத்தும் நிலையில், அமைச்சர் ஹந்துன்னெத்தியின் விஜயத்தினூடாக, தொழிற்துறை எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சனைகளை தீர்ப்பது பற்றி கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நிலைபேறான மற்றும் போட்டிகரமான உள்நாட்டு உற்பத்திக்கு அரசாங்கத்தின் ஆதரவு உறுதி செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.