Mar 28, 2025 - 11:06 AM -
0
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக நேற்று முன்தினம் (26) ஒரு குற்றவியல் முறைப்பாடும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 2 முறைப்பாடுகளும் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பெறப்பட்ட முறைப்பாடுகள் குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று (28) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி, 26 ஆம் திகதி பதிவாகிய குற்றவியல் முறைப்பாடு பாணந்துறை பொலிஸ் பிரிவில் பதிவாகி உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
அதே தினத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆண் ஒருவர் பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்தோடு, தேர்தல் விதிமுறைகளை மீறிய சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த பகுதியில் வீடு வீடாகச் சென்று அரிசி, ஆடை மற்றும் பணம் உள்ளிட்டவற்றை வாக்காளர்களுக்கு வழங்குவதாக தெரிவித்து மேற்படி முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
மற்றுமொரு முறைப்பாடு மொனராகலை பொலிஸ் பிரிவில் இருந்து பதிவாகியுள்ளது.
அலகியவத்த, மரகலவத்தை, குமாரவத்தை மற்றும் கிரிமண்டல மாவத்தை ஆகிய இடங்களில் உள்ள மத வழிப்பாட்டு தலங்களுக்கு அருகில் விளம்பரப் பலகைகள் பொருத்தப்பட்டிருப்பது குறித்து மொனராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவாகியுள்ளது.
மேற்படி முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

