Mar 28, 2025 - 06:08 PM -
0
கேகாலை மாவட்ட பொது வைத்தியசாலையில் பணிபுரியும் அனைத்து பல் அறுவை சிகிச்சை நிபுணர்களும், பல் அறுவை சிகிச்சை நிபுணர் மீது நோயாளி ஒருவர் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கேகாலை வைத்தியசாலையில் பணிபுரியும் வாய், பல் மற்றும் முக அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் இன்று (28) மதியம் வைத்தியசாலை வளாகத்தில் நபரொருவரால் தாக்கப்பட்டார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அரச பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் லக்மின ஏக்கநாயக்க தெரிவித்தாவது, எங்களது தொழிற்சங்கம் இந்த சம்பவத்தை வன்மையாக எதிர்க்கிறது. வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியது தொடர்பிலும் அவர் எதிர்ப்பை வௌியிட்டார்.
வைத்தியசாலை அமைப்பு சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பற்ற இடமாக மாறிவிட்டது என்றும், வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் செயலாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்கள் மூலம் வைத்தியர்கள் மற்றும் அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் எதிராக வெறுபான விடயங்களைப் பரப்பும் சதியை நிறுத்த அரசாங்கம் தலையிட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய வைத்தியர் லக்மின, இது தொடர்பாக நாளை நண்பகல் 12 மணி வரை கட்டாயமாக அடையாள வேலைநிறுத்தத்தை நடத்த தனது தொழிற்சங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி, கேகாலை மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து பல் அறுவை சிகிச்சை நிபுணர்களுடனும் இணைந்து இந்த வேலைநிறுத்தத்தைத் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டதாக வைத்தியர் லக்மின ஏக்கநாயக்க தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.