Mar 28, 2025 - 06:45 PM -
0
2025ஆம் ஆண்டுக்கான உள்ளக கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் இலங்கையில் நடைபெறவுள்ளது.
அதற்கமைய, 12ஆவது முறையாக உள்ளக கிரிக்கெட் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இடம்பெறவுள்ளது.
உள்ளக கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரானது இம்முறை கீழ் வருகின்ற நான்கு பிரிவுகளில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஆடவர் திறந்த பிரிவு (Men’s Open)
மகளிர் திறந்த பிரிவு (Women’s Open)
22 வயதின் கீழ்ப்பட்ட ஆடவர் (U22 Men’s)
22 வயதின் கீழ்ப்பட்ட மகளிர் (U22 Women’s)
இந்த உள்ளக கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை உட்பட இம்முறை அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு இராச்சியம், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் பங்குபெறவிருக்கின்றன.
சுமார் 1000 இற்கு மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கெடுக்கவிருக்கின்ற இந்த உள்ளக கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரானது இலங்கையில் ஒழுங்கு செய்யப்பட்ட மற்றுமொரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகின்றது.
உலகக் கிண்ணத் தொடரின் போட்டிகள் அனைத்தும் தலவத்துகொட அவுஸ்டேஷியா உள்ளக அரங்கில் செப்டம்பர் 27ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 05ஆம் திகதி வரை திட்டமிடப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
முதன்முறையாக கடந்த 1995ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்கமில் உள்ளக கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரானது ஒழுங்கு செய்யப்பட்டதோடு, இலங்கையில் 2004ஆம் ஆண்டு மேற்படி தொடர் இடம்பெற்றது.
இந்நிலையில், சுமார் 21 வருட இடைவெளியின் பின்னர் இம்முறை இரண்டாவது தடவையாக இலங்கையில் உள்ளக கிரிக்கெட் தொடர் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.