Mar 30, 2025 - 12:06 PM -
0
நாங்கள் அமைச்சரவையில் இருந்த காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தயாரிக்கப்பட்ட வரவு செலவு திட்ட அறிக்கையினை தற்போதைய ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வில் வாசித்தார் எனவும் அதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு தாம் நன்றியினை கூற கடமைப்பற்றுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நேற்று (29) அக்கரப்பத்தனை பகுதியில் இடம் பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்.
சர்வதேச நாணய நிதியத்தோடு கட்டுபாட்டுக்குள் எமது நடவடிக்கைகளை முன்னெடுக்கயிருந்தோம். நாம் இன்னும் பொருளாதார சிக்கலில் இருந்து வெளியில் வரவில்லை.
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படும் என தற்போதைய அரசாங்கம் கூறியது. ஆனால் வரவு செலவு திட்டத்தில் அது குறித்து எங்கும் குறிப்பிடப்படவில்லை.
தற்போது காணி உறுதிப்பத்திரம் வழங்கும் திட்டம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. காணி உரிமை என்பது ஒரு சமுகத்திற்கு வழங்கப்படுகின்ற ஒரு அடையாளம். வீட்டுரிமை என்பது நீங்கள் செய்யவேண்டிய கடமையாகும்.
நாட்டு மக்கள் ஆட்சிமாற்றம் வேண்டுமென கோரி 159 தோழர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளதோடு அதிக பலம் கொண்ட ஒரு ஜனாதிபதியை மக்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.
ஆட்சிமாற்றம் இடம்பெற்று ஆறு மாதங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில் இதுவரை எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. மலையக மக்கள் சார்ந்த நல்ல விடயங்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழுமையான ஆதரவினை வழங்கும்.
எம்மை பொருத்தமற்றில் நிறைய விடயங்கள் சொல்லப்பட்டாலும் வரவு செலவு திட்டத்தில் காணாமல் போயிருக்கிறது. வரலாற்றில் அதிகமான நிதி ஒதுக்கிடு மலையகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்ததாக மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் அறிவித்திருந்தார்கள்.
மலையக மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடு போதுமானதல்ல 3,000 மில்லியனை வைத்து கொண்டு பத்து லட்சம் மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியாது.
இந்த அரசாங்கத்தில் வாசிக்கப்பட்ட வரவு செலவு திட்டம் என்பது ஒரு கண்கட்டு வித்தையாகும் சரியான முறையில் இந்த வரவு செலவு திட்டத்தில் மலையக மக்கள் உள்வாங்கப்பட்டிருந்தால் நான் எதிர்கட்சியில் இருந்தாலும் அதற்கான ஆதரவினை நான் வழங்கியிருப்பேன்.
ஒருபுறம் மலையக மக்களுக்கு சலுகைகளை வழங்கிவிட்டு மறுபுறம் உரிமையை பறிக்கின்ற மந்திரவாதிகளுக்கு என்னால் எனது ஆதரவினை வழங்க முடியாது.
மலையக மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7,000 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 67 சதவீதமான நிதி ஒதுக்கீடு இந்தியா அரசாங்கத்தினால் வழங்கப்பட்டதாகும்.
மிகுதி 33 சதவீதம் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடாகும். இந்த அரசாங்கத்திற்கு இந்தியா அரசாங்கத்தினால் 1,300 வீடுகளும் இலங்கை அரசாங்கத்தினால் 329 வீடுகளும் வழங்கப்பட்டுள்ளது. இதனை இவர்கள் யாருக்கு வழங்குவார்கள் என தெரிவித்தார்.
குறித்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், கட்சியின் தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன், கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.சக்திவேல் என பலரும் கலந்து கொண்டனர்.
--