Mar 31, 2025 - 04:58 PM -
0
ஐ.பி.எல். தொடரில் நேற்று (30) நடைபெற்ற 11 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
சென்னை அணியின் பினிஷராக செயல்படும் தோனி 11 பந்துகளில் 16 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோனி 9 ஆம் வரிசையில் இறங்கினார். அப்போது அனைவரும் அது குறித்து கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் அவர் ஏழாம் வரிசையில் துடுப்பெடுத்தாடியிருந்தார்.
இருந்தாலும் அவரால் சிஎஸ்கே அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.
தோனியின் துடுப்பாட்ட வரிசை குறித்தும், அவர் துடுப்பாட்ட அணுகுமுறை குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து ஸ்டீபன் பிளெமிங் தெரிவிக்கையில்,
அவரது துடுப்பாட்ட வரிசை போட்டியின் சூழ்நிலை மற்றும் நேரம் சார்ந்தது. இது குறித்த முடிவை தோனி தான் எடுக்கிறார். அவரது உடல் மற்றும் முழங்கால் இதற்கு முன்பு இருந்தது போல் இல்லை. அவர் நன்றாக நடந்தாலும் அதில் சில இடர்பாடுகள் உள்ளன. அவரால் 10 ஓவர்கள் தொடர்ந்து நின்று துடுப்பாட்ட செய்வது முடியாது. அவர் அணிக்காக என்ன செய்ய முடியும் என்பதை சிந்தித்து செயல்படுகிறார்.
இன்றைக்குப் போல போட்டி சமநிலையில் இருந்தால் அவர் சற்று முன்பே துடுப்பாட்ட செய்வார். மற்ற வீரர்கள் தங்களின் வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும். எனவே, அவர் அதற்கான சமநிலையை சிந்தித்து செயல்படுகிறார்.
நான் கடந்த ஆண்டே கூறினேன், தோனி எங்களுக்கு மிகவும் மதிப்பு மிக்கவர். தலைமை பண்பு மற்றும் விக்கெட் கீப்பிங்கில் அவர் சிறந்து விளங்குகிறார் என தெரிவித்தார்.