Mar 31, 2025 - 10:20 PM -
0
கொக்கிளாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாயாற்றுக் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த இளம் பெண்ணொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இன்று (31) பகல் இந்த சம்பவம் பதிவாகியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த இளம் பெண் என தெரியவந்துள்ளது.
புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து விநோதப் பயணமொன்றிற்காக வந்த ஆடை வடிவமைப்பு பாடநெறியை பயிலும் மாணவிகள் மற்றும் அவர்களின் ஆசிரியை உள்ளிட்ட 16 பேர் கொண்ட குழுவினர் நாயாற்றுக் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது, இரு இளம் பெண்கள் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தர்ப்பத்தில் அவர்களை காப்பாற்ற முயற்சித்த ஆசிரியையும் நீரோட்டத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடற்படை அதிகாரிகளால் ஆசிரியை மற்றும் ஒரு இளம் பெண் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில், மற்றொரு இளம் பெண் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
பின்னர், பொலிஸார், கடற்படை அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மீனவ சமூகம் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, காணாமல் போன இளம் பெண்ணின் சடலம் நாயாற்றுக் கடற்படை முகாமுக்கு பின்புறமுள்ள கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
காப்பாற்றப்பட்ட இருவரும் தற்போது முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், உயிரிழந்த இளம் பெண்ணின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கொக்கிளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.