Apr 5, 2025 - 11:04 AM -
0
மலையகத்தின் வரலாறு 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில் கடந்த 76 வருடங்களாக மலையகத்தை ஆட்சி செய்து வந்த மலையக அரசியல்வாதிகள் மலையக மக்களை வாக்கு வங்கிகளாக மாத்திரம் இதுவரை காலமும் பயண்படுத்தி வந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
நேற்று (04) மாலை அக்கரப்பத்தனை பகுதியில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாராளுமன்ற உறுப்பினர் மலையகப்பகுதிகளில் மாற்று கட்சியினை சார்ந்தவர்கள் மக்கள் மத்தியில் மாறுபட்ட கருத்தினை கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். இதுவரை காலமும் இவர்கள் இது போன்ற அரசியல் செயற்பாட்டினை முன்னெடுத்து வந்தனர். குறிப்பாக அக்கரப்பத்தனை பிரதேசசபையின் ஊடாக இந்த மக்களுக்கு தேவையான எவ்வித வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கவில்லை.
பிரதேசசபை என்பது தமது சேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள கூடிய ஒரு சபையாகும். குறைந்த பட்சம் மக்கள் பயன்படுத்தும் வீதிகளுக்கு வீதி விளக்குகளை கூட பொருத்தியதில்லை. கிராம புறங்களிலும் தோட்டபுறங்களிலும் வாக்கு சேகரிக்கும் முறையில் வித்தியாசம் காணப்படுகிறது. டயகம பிரதேசத்தில் மேகமலைக்கு செல்லும் வீதி குதிரைக்கு கூட செல்ல முடியாத வீதியாக காணப்படுகிறது.
அதேபால் தலவாக்கலை நகரப்பகுதியில் அமைந்துள்ள கும்ழூட் தோட்டப்பகுதிக்கு செல்லும் வீதி கால்வாய் போய் காணப்படுகிறது. குறைந்த பட்சம் வீதியினை கூட புனரமைத்து கொடுக்க முடியாத இவர்கள் பிரதேச சபையின் அதிகாரத்தை பெற்று தருங்கள் என மக்களிடம் சென்று கோரிக்கை விடுக்கிறார்கள். இது போன்ற பொய்யான கருத்துக்களை மக்கள் நம்ப வேண்டாம்.
நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இருப்பது எமது தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் மூன்றில் இரண்டு பெருபாண்மையினை பெற்று 159 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றம் இருப்பதும் எமது கையில் கடந்த மாதம் வாசிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தின் ஊடாக மலையக மக்களின் பிரச்சினைகளை படிப்படியாக தீர்ப்பதற்கு பாரியளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அமைச்சர்களின் ஆதரவாளர்களுக்கு மாத்திரம் சேவைகள் இடம்பெற்று வந்தது மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்ககூடிய அரசாங்கத்தோடு நேரடியான தொடர்பினை வைத்திருக்கின்ற ஒரு நிறுவனமாக நாங்கள் பிரதேசசபையினை பயன்படுத்துவோம்.
அரசாங்கத்தில் ஒதுக்கப்பட்ட நிதியினை கொண்டு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் பிரதேசசபைகளை நாம் நிச்சயமாக கைப்பற்ற வேண்டும் தற்பொழுது கூட அக்கரப்பத்தனை பிரதேசசபை கடன் அடிப்படையில் முன்னெடுத்து செல்லபடுகிறது.
பிரதேசசபைகளின் ஊடாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு அரசாங்கம் பூரண ஒத்துழைப்பினை வழங்கும் மக்கள் மனத்தில் இருக்கின்ற எதிர்பார்ப்புகளுக்கும் பிரச்சினைகளுக்கும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் எமது அரசாங்கத்தின் ஊடாக தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என தெரிவித்தார்.
--